தமிழக செய்திகள்

பெட்ரோல் ஊற்றி சப்-இன்ஸ்பெக்டர் எரித்துக்கொலை: கைதான மனைவி வாக்குமூலம்

மனைவி செல்வராணியிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னை போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில் வசித்து வந்தவர் ராஜ் (வயது 58). இவர் சென்னை ஆயுதப்படை போலீசில் மோட்டார் வாகன பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். 1992-ம் ஆண்டு போலீஸ்காரராக பணியில் சேர்ந்த இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார் தன்னை விட மிகவும் குறைந்த வயதான செல்வராணி (32) என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

2-வது திருமணம்

செல்வராணிக்கு இது 2-வது திருமணமாகும். அவர் தனது முதல் கணவரை பிரிந்து, சப்-இன்ஸ்பெக்டரை திருமணம் செய்திருக்கிறார். திருமணம் நடந்தபோது செல்வராணிக்கு, அவரது முதல் கணவர் மூலம் மகள் இருந்தார். ராஜ் மூலம் ஒரு மகனும், மகளும் பிறந்தார்கள். தற்போது 2 மகள்களும், ஒரு மகனும் அவர்களுக்கு உள்ளனர். 3 பேரும் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கிறார்கள். மூத்த மகளுக்கு 16 வயதும், 2-வது மகனுக்கு 15 வயதும், 3-வது மகளுக்கு 14 வயதும் ஆகியுள்ளது.

எரிந்த நிலையில்

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ், மனைவி செல்வராணியோடு புரசைவாக்கத்தில் உள்ள ஒரு துணிக்கடையில், துணி வாங்கியுள்ளார். அதன்பிறகு வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு, வீட்டின் கீழ் அறையில் படுத்து தூங்கியுள்ளார். மேல் மாடியில் அவரது மனைவி இருந்ததாக தெரிகிறது. மாலை 4.15 மணியளவில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் தூங்கிய அறையில் இருந்து திடீரென தீப்பிடித்து வீடு முழுவதும் புகை மண்டலமாக மாறி உள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வராணி கீழே இறங்கி வந்துபார்த்தார். அப்போது. சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்த நிலையில், இறந்து கிடந்தார். உடனே செல்வராணி கூச்சல்போட்டு கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.

எரித்து கொலை

இது பற்றி தகவல் கிடைத்ததும் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் பொன்ராஜ், இன்ஸ்பெக்டர் ராமசுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற் கொண்டனர்.

சப்-இன்ஸ்பெக்டர் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தடய அறிவியல் நிபுணர்களும் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

பெட்ரோல் வாசனை

சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் உடலில் இருந்து மூக்கை துளைக்கும் அளவுக்கு பெட்ரோல் வாசனை வந்தது போலீசாருக்கு பெரிய அளவில் சந்தேகத்தை ஏற்படுத்தியது இது தொடர்பாக மனைவி செல்வராணியிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தார். செல்வராணி கூறும்போது, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் போக்சோ வழக்கு ஒன்றில் சிக்கியிருப்பதாகவும், அதனால் மனஉளைச்சலில் காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தற்கொலை

இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று முதலில் போலீசார் நினைத்தனர். ஆனால் செல்வராணியிடம் நடத்தப்பட்ட கிடுக்கி பிடி விசாரணையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் கொடூரமாக பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

செல்போனில்

முந்தைய நாள் அவர் காளஹஸ்தி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு வந்ததும் மனைவியுடன் வெளியில் சென்று ஜவுளி எடுத்து விட்டு திரும்பியதும் போலீசாருக்கு செல்வராணி மீது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அவரது நடவடிக்கைகள் குறித்து அக்கம்பக்கத்தில் போலீசார் விசாரித்தனர். அவரது குழந்தைகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை

இந்த விசாரணையில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜூக்கும் அவரது மனைவி செல்வராணிக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. செல்வராணி நீண்ட நேரம் செல்போனில் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார். இதை ராஜ் கண்டித்து உள்ளார். ஒரு கட்டத்தில் செல்வராணியிடம் இருந்து செல்போனையும் பறித்து உள்ளார்.

மர்ம நபர்

இதைத் தொடர்ந்து இந்த கொலைச் சம்பவத்தில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது பற்றி அறிவதற்காக அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டுப் பார்த்தனர் அப்போது சப்-இன்ஸ்பெக்டர் வீட்டு முன்பு பொருத்தப்பட்டிருந்த கேமராவில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

தேவா

அந்த நபர் யார் என்று விசாரித்தனர். இதில் அதிரடி திருப்பம் ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளில் சென்றவரின் பெயர் தேவா என்று தெரியவந்தது. நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த அவர் தலைமறைவாகி விட்டார். செல்வராணியின் செல்போனை ஆய்வு செய்தபோது அதிலும் சில தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையின் போது, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ். தூங்கும்போது பெட்ரோல் ஊற்றி மிகவும் கொடூரமான முறையில் தீவைத்து எரித்து கொல்லப்பட்டது தெரிய வந்தது. மனைவி செல்வராணியே இந்த கொடூர செயலை அரங்கேற்று இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக கைதான செல்வராணி போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

சித்திரவதை

என் மீது சந்தேகம் கொண்டு, கணவர் என்னை தினமும் அடித்து உதைத்து உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தி வந்தார். இதனால் கணவரை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டினேன்.

எனது ஆண் நண்பரான தேவாவிடம் இது பற்றி தெரிவித்தேன். எப்படி கொலை செய்வது என்று திட்டம் தீட்டிய போது சாப்பாட்டில் தூக்க மாத்திரை கலந்து கொடுப்பது என இருவரும் முடிவு செய்தோம்.

தூக்க மாத்திரை

இதன்படி நேற்று முன்தினம் தூக்க மாத்திரை கலந்த சாப்பாட்டை கணவருக்கு தெரியாமல் கொடுத்தேன் அவர் சாப்பிட்டு விட்டு நன்றாக தூங்கினார். இதன் பிறகு தேவாவுக்கு தகவல் சொல்லி வீட்டுக்கு வர வழைத்தேன். இருவரும் சேர்ந்து தூங்கிக் கொண்டிருந்த கணவரின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்றோம்.

கடந்த 3 மாதங்களாக தொடர்ச்சியாக கணவர் என்னை துன்புறுத்தி வந்ததால் கொலை செய்யும் அளவுக்கு நான் சென்று விட்டேன் வேறு வழி தெரிய வில்லை.

இவ்வாறு அவர் வாக்கு மூலம் அளித்திருப்பதாக போலீசாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்காதல்?

கொலையாளி தேவாவுக்கும், செல்வராணிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இது பற்றியும் அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள். அதுகுறித்து செல்வராணி முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவிப்பதாகவும் தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

தேவாவை தேடி வருவதாகவும், அவர் பிடிபட்டால் தான் இதுபற்றிய முழு விவரமும் தெரியவரும் என்றும் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னை போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

SCROLL FOR NEXT