நெல்லை மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் குமார், பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். காவலர் புகாரின் அடிப்படையில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கு முன்பும் அவர் மீது இதேபோல் குற்றச்சாட்டுகள் இருந்ததாக தகவல்.
நெல்லையை அடுத்த தாழையூத்தை சேர்ந்தவர் குமார்(வயது 49). இவர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் ஈரோடு பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் விஜய் பங்கேற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பாதுகாப்பு பணிக்காக நெல்லை மாநகர பகுதியில் இருந்து சென்ற ஆண் மற்றும் பெண் போலீசாருடன் இணைந்து சென்றுள்ளார்.
தொடர்ந்து அன்றைய தினம் இரவில் அவர்கள் போலீஸ் வேனில் மீண்டும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் குமார் அமர்ந்திருந்த இருக்கைக்கு முன்னால் இருந்த இருக்கையில் பெண் காவலர் ஒருவர் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது அந்த பெண் காவலரை குமார் பாலியல் சீண்டல் செய்ததாகவும், தனது காலை வைத்து அந்த பெண் காவலரின் காலில் தடவி தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் காவலர் நெல்லை வந்து சேர்ந்ததும், மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சயிடம் நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரது அறிவுறுத்தலின்பேரில் பெண் காவலர், பாளை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் பாலியல் சீண்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் குமாரை கைது செய்தனர்.
கைதான குமார், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை தீபத்திருவிழா பாதுகாப்பு பணிக்கு சென்றபோது இதேபோல் மற்றொரு பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அதன்பின்னர் அந்த சம்பவம் மூடி மறைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.