காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் அரசு மற்றும் தனியார் பஸ்களில் வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் பஸ்களில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் பஸ்சின் படிக்கட்டுகள், ஜன்னல்கள் மற்றும் பஸ்சின் பின்பக்கம் உள்ள கம்பிகளில் தொங்கியபடி செல்கிறார்கள். இதனை கண்டிக்கும் பஸ் டிரைவர், கண்டக்டர்களிடம் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனை கண்டிக்கும் பயணிகளிடமும் மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதால் காஞ்சிபுரம்-அரக்கோணம் சாலையில் செல்லும் பஸ்களில் தினந்தோறும் தகராறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் தனியார் பஸ் ஒன்றில் பள்ளி மாணவர்கள் பின்பக்க கம்பியில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த காட்சி பார்ப்பவர்களை பதற வைக்கிறது.
பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்கவும், மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.