அரசு பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் கல்லூரி மாணவர்கள் சீருடையுடன் கட்டணமின்றி அரசு பேருந்துகளில் பயணிக்கலாம் என தமிழ்நாடு போக்குவரத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத்தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
“தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் உத்தரவிற்கிணங்க, வரும் 04.06.2026 அன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டும், அதன் பின்னர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை திறக்கப்பட உள்ளதை முன்னிட்டும்,
2026-27 கல்வியாண்டில் மாணவர், மாணவியர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை அவர்தம் கல்வி பயிலும் பள்ளி , கல்லூரியிலேயே வழங்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக ஏற்பாடு செய்து வருவதால், அதற்கு தேவையான கால அளவினை கருத்தில் கொண்டு, பள்ளி மாணவ, மாணவியர்கள் சீருடை அணிந்து, எவ்வித சிரமமின்றி தத்தம் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரை கட்டணமின்றி சென்று வருவதற்கு அனுமதிக்கப்படுகிறது.
அதேபோன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவியர்கள் தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து கட்டணமின்றி, எவ்வித சிரமமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுகின்றது.
மேலும் பள்ளி துவங்கும், முடியும் நேரம் வரை பேருந்துகள் சரியாக இயங்குவதை கண்காணித்திட போக்குவரத்துக் கழக அலுவலர்கள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி மாணவ, மாணவியர்களை பாதுகாப்பாக ஏற்றி, இறக்கி செல்லவும் அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர், ஓட்டுநர்களுக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.