தமிழக செய்திகள்

நட்புக்காக இப்படியா செய்வாங்க! - சூடான டீயை கையில் ஊற்றி வீடியோ எடுத்த +2 மாணவிகள்

மாணவிகளின் இத்தகைய ஆபத்தான செயலை ஆசிரியர்கள் அனுமதிக்கக்கூடாது என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மாலை மலர்

தமிழகத்தில் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு மார்ச் 2-ந் தேதி தொடங்கி வரும் 26-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

இதில், ஒரு சில பாடப்பிரிவு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. பொதுத்தேர்வுகள் முடிவடைந்ததால் மாணவ,மாணவிகள் தங்களது நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

முன்பெல்லாம் தேர்வு முடிந்து தேர்வு அறையை விட்டு வெளியே வரும் மாணவ, மாணவிகள் கத்தி கூச்சலிட்டு, ஒருவர் மீது ஒருவர் பேனா மையை பூசியும், வண்ண பொடிகளை தூவியும் தங்களது நட்பை வெளிப்படுத்துவது வழக்கம். தற்போது இந்த பழைய கலாச்சாரம் கசந்துவிட்டதால் இன்ஸ்டாகிராம், முகநூல் போன்றவற்றில் வெளியிடப்படும் ஆபத்தான செயல்களை நாமும் செய்தால் என்ன என்ற மனநிலை உள்ள மாணவ, மாணவிகள் அதிகமாக உள்ளனர்.

இந்நிலையில், வட இந்தியர்களின் கலாச்சாரமாக தற்போது டிரெண்டிங் ஆகி வரும் ஒரு ஆபத்தான செயலை திருப்பத்தூர் மாணவிகள் நேற்று பொதுவெளியில் செய்து அதை வீடியோவாக எடுத்து சமூக வளைதளங்களில் பதிவேற்றம் செய்தது தற்போது வைரல் ஆகி வருகிறது.

திருப்பத்தூர் மீனாட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வு முடிவடைந்து வெளியே வந்த மாணவிகள் சிலர் அருகே உள்ள ஒரு டீ கடைக்கு நேற்று மதியம் சென்று அங்கு சூடாக ஒரு டீ வாங்கி அதை மாணவிகள் 2 பேர் தங்களது கைகளை இறுக்கமாக பிடித்து கொதிக்கும் டீயை கைகள் மேல் ஊற்றி, எவ்வளவு சூடு இருந்தாலும் கைகளை பிரிக்கக்கூடாது, அது தான் உண்மையான நட்பு என்றும், ‘துன்பத்திலும் நம் நட்பு எப்போதும் பிரியக்கூடாது’’ எனக்கூறி அதை தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து அதை சமூக வலைளங்களில் பதிவேற்றம் செய்தனர்.

இந்த காட்சி வைரல் ஆனது. கொதிக்கும் டீயை மாணவிகளின் கைகளில் படும்போது அதன் வெப்பம் தாங்க முடியாமல் மாணவிகள் அலறிய காட்சி பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாகியது. மாணவிகளின் இத்தகைய ஆபத்தான செயலை ஆசிரியர்கள் அனுமதிக்கக்கூடாது என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.