மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தகவல் பரவியதால் பள்ளியில் படிக்கும் மற்ற மாணவ-மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 500-க்கும் மேற்பட்டோர் பள்ளி முன்பு உள்ள சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
கேளம்பாக்கம்-வண்டலூர் சாலையில் உள்ள கண்டிகையில் அரசு பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பள்ளியில் உள்ள கழிப்பறைக்கு சென்றபோது மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
மேலும் மயக்கம் அடைந்த மாணவியை மற்ற மாணவிகள் மீட்டதாகவும் கூறப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவியிடம் பள்ளி ஆசிரியர் விசாரித்தபோது கழிப்பறைக்கு சென்றபோது முகத்தை மூடியபடி வந்த மர்ம நபர் ஒருவர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகவும் அதனால் மயக்கம் அடைந்ததாகவும் கூறி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் தாழம்பூர் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கேளம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலரும் விசாரணையில் ஈடுபட்டனர். மருத்துவ பரிசோதனையில் மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளாகவில்லை என்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து மாணவியிடம் போலீசார் விசாரித்தபோது தேர்வுக்கு பயந்து மாணவி நாடகம் ஆடியது தெரிந்தது. இதைத் தொடர்ந்து மாணவிக்கு போலீசார் அறிவுரைகள் வழங்கி எச்சரிக்கை செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தகவல் பரவியதால் ஆத்திரம் அடைந்த பள்ளியில் படிக்கும் மற்ற மாணவ-மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 500-க்கும் மேற்பட்டோர் இன்று காலை பள்ளி முன்பு உள்ள சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். பெற்றோர்கள் கையில் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மறியல் போராட்டத்தால் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வண்டலூர் முதல் கண்டிகை வரையும் மற்றும் கண்டிகை முதல் கேளம்பாக்கம் வரையும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. தாழம்பூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.