மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன். இவரது உடல் முட்புதர் குட்டை ஒன்றில் இருந்து கடந்த வாரம் திங்கட்கிழமை சடலமாக கண்டெடுக்கப்பட்டது. மாணவன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவரின் மரணத்தைக் கொலை வழக்காக மாற்ற வேண்டும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும், விசாரணையைத் துரிதப்படுத்தி குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய கோரி 9 நாட்களுக்கு மேலாக தமிழ்ச்செல்வன் உடலை வாங்க மறுத்து மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுப்பட்ட போராட்டகாரர்கள் மீது மதுரை மாநகர காவல் துறை தாக்குதல் நடத்தியதிற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனங்களை தெரிவித்துள்ளது.
இது குறித்து சமூகவலைத்தள பதிவில் கூறிப்பட்டுள்ளதாவது
மதுரை ஆனையூர் கூடல் புதூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற மாணவர் கடந்த ஏழாம் தேதி மர்மமான முறையில் இறந்துள்ளார்.11 ஆம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவரின் உடல் முட்புதர்கள் நிறைந்த குட்டை பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அது கொலையாக இருக்கலாம் எனவும் உறவினர்கள் கூறிவருகின்றனர்.
மாணவர் இறந்து ஒரு வார காலம் ஆகியும், அவரது உடலை வாங்க தாயார் யோகலட்சுமி மறுத்து வருகிறார். அவரது மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். மகன் மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளை கண்டறிந்து, சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.
இது தொடர்பாக காவல்துறை எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுக்காத நிலையில், மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகம் முன்பாக போராட்டம் உறவினர்களால் நடத்தப்பட்டுள்ளது.
போராட்டத்தில் பங்கேற்ற பெண்களை காவல்துறையினர் மிக மோசமான முறையில் தாக்கியுள்ளனர்.சாலையில் தவறி விழுந்த பெண்ணின் கழுத்தை பெண் காவலர்கள் காலால் மிதிக்கின்ற கொடூரமான காட்சி பல்வேறு ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது.
காவல்துறையினரின் இத்தகைய கொடூரமான நாக்குதல் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அதுவும் முதலமைச்சர் பொறுப்பில் உள்ள காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகளே, மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகுந்த கவலை அளிக்கிறது. இது கடும் கண்டனத்திற்குரியது.
போராடிய மக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, மாணவரின் மரணத்தை கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு. தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
என இவ்வாறு தனது பதிவில் சிபிஐ தெரிவித்துள்ளது.