தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை எண்ணிக்கை தற்போது 1 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. நேற்றுவரை (ஏப்.27) மொத்தம் 1,12,711 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 1-ம் வகுப்பில் 97,737 மாணவர்களும், 2 முதல் 8-ம் வகுப்பு வரை 8,178, மழலையர் வகுப்புகளில் 6,796 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.
மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் இக்கல்வியாண்டுக்கான சேர்க்கை பணிகள் மார்ச் 1-ம் தேதியே தொடங்கப்பட்டன. கடந்த ஆண்டில் சுமார் 4.30 லட்சம் மாணவர்கள் புதிதாகச் சேர்ந்திருந்த நிலையில், இந்த ஆண்டு 5 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டின் கீழ் (RTE) எல்.கே.ஜி வகுப்பில் சேர விரும்புவோர் மே 18 வரை rte.tnschools.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.