5 நாட்கள் வங்கிகள் செயல்படாமல் போனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கருதி ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 3 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
வங்கிகள் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய அளவில் இந்த வேலைநிறுத்தம் 28-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் 30-ந்தேதி (புதன்கிழமை) வரை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
வங்கிகளுக்கு தற்போது முதல் மற்றும் 3-வது சனிக்கிழமை வேலை நாட்களாகவும் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகள் விடுமுறை நாட்களாகவும் உள்ளன. சனிக்கிழமை வேலை நாளை முற்றிலும் விடுமுறையாக அறிவிக்க வேண்டும். அதனை ஈடு செய்யும் வகையில் 5 நாட்கள் வேலை நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.
இது தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை வங்கி ஊழியர்கள் கூட்டமைப்புக்கும், மத்திய நிதித்துறை அமைச்சகத்துக்கும் இடையே நடைபெற்றது. இதில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. 5 நாட்கள் வேலை என்பதை மத்திய அரசு ஏற்காததால் நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த 3 நாட்கள் வேலைநிறுத்தத்திற்கு முன்னதாக இன்று (சனிக்கிழமை) நாளை (ஞாயிற்றுக்கிழமை) 2 நாட்களும் விடுமுறை நாட்களாக இருப்பதால் 5 நாட்கள் வங்கிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டது.
தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகள் செயல்படாமல் போனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கருதி ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) வங்கிகள் செயல்படுவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு எடுத்துள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் அனைத்து தனியார் வங்கிகள் நாளை செயல்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இன்று 4-வது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும். திங்கட்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வங்கி ஊழியர்கள் ஆயத்தமாகி வருகின்ற நிலையில் பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல், காசோலை பரிவர்த்தனை மற்றும் ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தல் போன்ற முக்கிய சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என கருதப்படுகிறது.
அதனால் அனைத்து வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல்களை அனுப்பி வருகிறது. வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் காரணமாக வாடிக்கையாளர் சேவை பாதிக்கப்படக்கூடும். எனவே இணையதள சேவைகள், ஏ.டி.எம்.கள், மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தொழில் நிறுவனங்கள், வர்த்தகப் பிரமுகர்கள், சிறு வியாபாரிகள் தங்களது அன்றாட பணம் மற்றும் காசோலை பரிமாற்றங்களை செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளதால் ஏ.டி.எம்.களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது.
அதனால் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன. எந்த வங்கியில் வாடிக்கையாளராக இருக்கிறோமோ அந்த வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கு கட்டணம் கிடையாது. அதற்கு மேல் பயன்படுத்தினால் ரூ.30 வரை பிடித்தம் செய்யப்படுகிறது.
இதேபோல பிற வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தாலும் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கால் ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளது. வேலைநிறுத்த காலத்தில் (3 நாட்கள்) பொதுமக்கள் எந்த வங்கி ஏ.டி.எம்.களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்று அறிவுறுத்தி இருப்பதால் பொதுமக்கள் தங்கள் தேவைக்கு ஏ.டி.எம். மையங்களை பயன்படுத்தலாம்.
டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் பொதுமக்கள் அதிகம் ஈடுபட்டாலும் ரொக்கமாக சில நேரங்களில் பணம் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதனால் வேலைநிறுத்த காலத்தில் ஏ.டி.எம்.கள் மட்டுமே பொதுமக்களுக்கு கை கொடுக்கும் என்பதால் அனைத்து ஏ.டி.எம்.களி லும் பணத்தை முழுமையாக நிரப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுவாக ஓரிரு நாட்களில் ஏ.டி.எம்.களில் நிரப்பப்படும் பணம் காலி ஆகிவிடும். தற்போது தொடர்ந்து 3 நாட்கள் வங்கி சேவை முடங்குவதால் ஏ.டி.எம்.களிலும் பணம் நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை வரை பெரும்பாலான ஏ.டி.எம்.கள் செயல்பட வாய்ப்புள்ளது. ஆனால் புதன்கிழமை ஏ.டி.எம்.மில் பணம் இல்லாமல் முடங்கும் அபாயம் உள்ளது.
எனவே பொதுமக்கள் தங்கள் பண பரிவர்த்தனையை யு.பி.ஐ. டிஜிட்டல் மூலம் மேற்கொள்வது நல்லது. குறைந்த அளவு பணம் ரொக்கமாக வைத்திருப்பதும் பாதுகாப்பானதாகும்.
இதுகுறித்து வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது:-
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடைபெறுவதால் ஏ.டி.எம்.களில் முழு அளவு பணம் நிரப்பப்படுகிறது. எந்த ஏ.டி.எம்.களிலும் யார் வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம். அதற்கு கட்டணம் கிடையாது என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.
அதனால் பொதுமக்கள் ஏ.டி.எம். மையங்களை அதிக அளவில் பயன்படுத்தக்கூடும். நாளை வங்கிகள் செயல்படுவதால் அனைத்து ஏ.டி.எம்.களிலும் பணம் நிரப்பப்படும். அவை திங்கட்கிழமையே காலியாக வாய்ப்பு உள்ளது. நாளை பணம் எடுத்தல், டெபாசிட் செய்தல் போன்ற குறைந்தபட்ச சேவை மட்டுமே நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில் வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்புகளுடன் நிதி அமைச்சக உயர் அதிகாரிகள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இதில் ஒரு வேளை உடன்பாடு ஏற்பட்டு இன்று மாலைக்குள் முடிவு தெரிய வரும்.
வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டால் நாளை வங்கிகள் செயல்பட வாய்ப்பு இல்லை.
வங்கிகள் நாளை செயல்படுவது குறித்து கனரா வங்கி கிளை சீனியர் மேனேஜர் ஒருவர் கூறுகையில், நாளை வழக்க மான நாட்களில் என் னென்ன சேவைகள் நடை பெறுமோ அவை அனைத் தும் நடைபெறும்.
நகை அடமான கடன், காசோலை பரிவர்த்தனை, உள்ளிட்ட அனைத்து சேவைகளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வழங்கப்படும் என்றார்.