சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச முனையங்கள் உட்பட விமான நிலைய வளாகம் முழுவதும் சமீப காலமாக தெரு நாய்கள் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்து உள்ளதோடு நாய்களின் அட்டகாசங்களும் அதிகரித்துள்ளன. நாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டுக்கொண்டு, பயணிகளை விரட்டுவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.
இதனால் வெளிநாட்டு பயணிகள் உட்பட விமான பயணிகள், பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் வருபவர்களை ஓட ஓட விரட்டுகின்றன. பயணிகள், விமான நிலைய ஊழியர்கள், விமான நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இது குறித்து பயணிகள், விமான நிலையங்களில், தெரு நாய்கள் சுற்றி அலைவதை போட்டோக்கள் எடுத்து, சமூக வலைதளம் மூலம், சென்னை விமான நிலைய அதிகாரிகளின் கவனத்திற்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
இதற்கு சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் பதில் அளிக்கையில், உள்ளாட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்து, அவர்கள் மூலம், சென்னை விமான நிலையத்திற்குள் சுற்றும் நாய்களை, அவ்வப்போது பிடிக்கும் நடவடிக்கைகள் எடுக்கிறோம். இதனை மேலும் தீவிரப்படுத்த இருக்கிறோம் என்று பதில், பதிவிட்டு உள்ளனர்.
இதுகுறித்து பயணிகள் தரப்பில் கூறும்போது, சென்னை சர்வதேச விமான நிலையம் மிகவும் பாதுகாப்பு வளையத்திற்குள் வரக்கூடியது. இந்த விமான நிலையத்தில், இதை போல் நாய்கள் பிரச்சனைகள் தொடர்ந்து இருப்பதும், இதனால் பயணிகள், ஊழியர்கள், காவலர்கள் உட்பட பல தரப்பினரும் பாதிக்கப்படுவதும் சரியானது இல்லை.
எனவே விமான நிலைய அதிகாரிகள், இந்த நாய்களை நிரந்தரமாக, சென்னை விமான நிலைய பகுதிக்குள் வரவிடாமல் தடுப்பதற்கு, உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, விமான நிலையத்தில் நாய்கள் பிரச்சனைகளை கட்டுப்படுத்த, நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். நாய்களை பிடிப்பவர்கள் மூலம், சமீபத்தில் சில நாய்களை பிடித்து, சுமார் 25 கிலோமீட்டருக்கு அப்பால் கொண்டு போய் விட்டுவிட்டு வந்தோம்.
ஆனால் நாங்கள் வருவதற்கு முன்னதாக, அந்த நாய்கள் அனைத்தும், சென்னை விமான நிலையத்திற்குள் வந்துவிட்டன. சுப்ரீம் கோர்ட்டு, தெரு நாய்களை கட்டுப்படுத்த, கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே நாங்களும் நாய்கள் பிரச்சனைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டு இருக்கிறோம் என்றனர்.