உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
மேலும் இங்குள்ள கலை வேலை பாட்டுடன் கூடிய வானுயர்ந்த கோபுரங்களையும், சிற்பங்களையும் காணவும் வெளி நாட்டினர் வருகை தருகின்றனர். அனைத்து மாதங்களும் திருவிழாக்களும், உற்சவங்களும் காணும் கோவில் ஆகும்.
பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் வருகிற செப்டம்பர் மாதம் 17-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த இந்து அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான திருப்பணிகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நடந்து வருகிறது.
4 மிகப்பெரிய கோபுரங்கள் மற்றும் கோவிலில் உள்ள சுவாமி-அம்மன் சன்னதி, சிறிய கோபுரங்கள், தெப்பக்குளம், நூறு கால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்ட கோவிலின் அனைத்து பகுதிகளிலும் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 80 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது பெயிண்ட் ஓவியங்கள் வரையும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கோவிலின் தெற்கு கோபுரம் நுழைவு வாயில் மீனாட்சி அம்மன் சன்னதி அருகே முக்குறுணி விநாயகர் சன்னதி உள்ளது. இங்கிருந்து சுவாமி சன்னதிற்கு செல்லும் பிரகாரங்களில் தற்போது பெயிண்ட் ஓவியங்கள் வரையும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இந்த பிரகாரத்தில் உள்ள குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை அருகே உள்ள கல் தூண் ஒன்று சேதமடைந்து உடைந்து விழுந்தது.
அந்த நேரத்தில் பக்தர்கள் யாரும் அங்கு இல்லாததால் பாதிப்பு ஏதும் இல்லை. தூண் உடைந்து விழுந்தது குறித்து தகவலறிந்த கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து பொறியாளர்களின் ஆலோசனைபடி உடைந்த பகுதியை அதே இடத்தில் வைத்து மீண்டும் கீழே விழாதபடி கம்பி கட்டியுள்ளனர்.
இதுகுறித்து கோவில் ஊழியர்கள் கூறுகையில், முக்குறுணி சன்னதி உள்ள பிரகாரம் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. தற்போது இங்கு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பணிகள் நடந்து வரும் நிலையில் தூணின் ஒரு பகுதி பெயர்ந்து விழுந்து உள்ளது.
கோவில் சிற்பங்கள் தூண்களை ஒட்டி சாரம் கட்டியதால் மேற்கண்ட கல் தூணின் பகுதி வலுவிழந்து விழுந்திருக்கலாம் என்றனர். கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் தூண் இடிந்து விழுந்திருப்பது பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.