நடந்து முடிந்த சட்டசபை தேர்தலை தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் பெரும்பான்மையை நிரூபித்து எப்போது ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு தான் மேலோங்கி உள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை பெறும் முயற்சியில் ஈடுபட்ட த.வெ.க.வினருக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க உள்ளதாக நேற்று முதல் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் இன்று உறுதியாகி உள்ளது.
அதன்படி, இன்று காலை முதல் வெளியாகி வரும் செய்திகள் த.வெ.க.வை காங்கிரஸ் ஆதரிப்பது உறுதிப்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் செய்தியாளர்களை சந்திக்கின்றனர். இதில் த.வெ.க.வை ஆதரிப்பதாக காங்கிரஸ் தெரிவிக்கும் என கூறப்படுகிறது.
இதனால் பல ஆண்டு காலமாக தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று வந்த காங்கிரஸ் அக்கூட்டணியில் இருந்து வெளியேறுகிறது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.