தமிழக செய்திகள்

விபத்தில் மூளைச்சாவு: உறுப்பு தானம் செய்த மருத்துவ கல்லூரி மாணவரின் உடலுக்கு அரசு மரியாதை

விபத்து குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீழிருப்பு கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தேவனின் உடலுக்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

பண்ருட்டி அருகே கீழிருப்பு தெற்கு தெருவை சேர்ந்த ஏழுமலை.

மருத்துவக் கல்லூரி மாணவர்

இவரது மகன் தேவன் (20). இவர் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். கடந்த 8-ந் தேதி இரவு தேவன், மோட்டார் சைக்கிளில் நெல்லுத்தோப்பு பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த தேவன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

உடல் உறுப்பு தானம்

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த தேவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், தேவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அவரது உறுப்பு தானம் மூலம் பலருக்கு மறுவாழ்வு கிடைத்தது.

மருத்துவராகி பல உயிர்களை காக்க வேண்டும் என்ற கனவுடன் படித்து வந்த மாணவனின் உறுப்பு தானம், பலருக்கு மறுவாழ்வு அளித்துள்ளதாக உறவினர்கள் மற்றும் பொது மக்கள் தெரிவித்தனர். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு மரியாதை

இந்த நிலையில் நேற்று கீழிருப்பு கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தேவனின் உடலுக்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடலூர் வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, பண்ருட்டி டி.எஸ்.பி. ரகுபதி மற்றும் பண்ருட்டி தாசில்தார் சந்திரன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

இதில் பொதுமக்கள், உறவினர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

SCROLL FOR NEXT