தமிழக செய்திகள்

"ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் மகனை முதல்வராக்குவது தான்": அமித் ஷா கடும் சாடல்!

தமிழக மக்களுக்கு நன்மை கிடைக்கும் வகையில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும்.

மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்துக்காக நேற்று இரவு கோவை வந்தார்.

அங்குள்ள நட்சத்திர விடுதியில் இரவு தங்கிய அவர் இன்று காலையில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட சிவகிரியில் நடை பெற்ற ‘ரோடு ஷோ’வில் கலந்து கொண்டார்.

அவர் சிவகிரி அரசு மருத்துவமனை பகுதியில் இருந்து சிவகிரி பஸ் நிலையம் அருகே உள்ள தீரன் சின்னமலை சிலை இருக்கும் பகுதி வரை சுமார் 700 மீட்டர் ரோடு ஷோவில் பங்கேற்றார்.

சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த பொதுமக்கள், தொண்டர்கள் அமித் ஷாவுக்கு மலர் தூவி வரவேற்றனர். பின்னர் மத்திய அமைச்சர் அமித்ஷா பொதுமக்கள் மத்தியில் பேசினார்.

அப்போது அமித்ஷா கூறியதாவது:-

இந்தத் தொகுதியில் போட்டியிடக் கூடிய பா.ஜ.க. வேட்பாளர் கிருத்திகா சிவகுமாருக்கு உங்கள் பொன்னான வாக்குகளை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

அ.தி.மு.க. உடன் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் கூட்டணியை பா.ஜ.க அமைத்து உள்ளது.

அ.தி.மு.க. தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்போது தி.மு.க.வின் லஞ்சம், ஊழல் ஒழிக்கப்படும்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. இதை சிறப்பான நிலைக்கு புதிய அரசு கொண்டு வரும்.

மோடி தலைமையில் இந்த ஆட்சி புதிதாக அமையும்போது தமிழகத்தின் சிறப்புகள், பெருமைகள் மீட்டு எடுக்கப்படும்.

தனது மகனை முதல் அமைச்சராாக்குவது தான் முதலமைச்சர் ஸ்டாலினின் ஒரே குறிக்கோள்.

தமிழ்நாட்டில் இருக்கும் பெண்கள் அனைவரும் அரசியலில் பங்கு எடுக்கும் வகையில் நாடளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்ததை நிறைவேற்ற விடாமல் தி.மு.க.வும் காங்கிரசும் முறியடித்து உள்ளது.

பாரத தேசத்தில் பெண் சமுதாயத்திற்கு அதிகாரம் அளிக்கும் இட ஒதுக்கீடு என்ற நல்ல முயற்சியை தி.மு.க. காங்கிரஸ் தோற்கடித்து உள்ளது .

மக்கள் தொகை கணக்கெடுப்பை தவிர்த்து தமிழ்நாடு 50 சதவீதம் தொகுதி மறுசீரமைப்பு மூலம் புதிய தொகுதி அமைய புதிய முயற்சி எடுத்தோம். ஆனால் குறுகிய நோக்கத்தோடு தொகுதி எண்ணிக்கை அதிகமாக ஆகி விடக்கூடாது.

பெண்களுக்கு அதிக இடம் கிடைத்து விடக்கூடாது என்ற தீய எண்ணத்தோடு இந்த மசோதா வெற்றி பெறவிடாமல் தி.மு.க., காங்கிரஸ் தடுத்துவிட்டது.

எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மகளிருக்கான அரிய வாய்ப்பை தி.மு.க., காங்கிரஸ் தடுத்துவிட்டது. தமிழக மக்களுக்கு நன்மை கிடைக்கும் வகையில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும்.

முதலில் கருணாநிதி ஆட்சியில் இருந்தார். பின்னர் மகன் முதல்வராக வந்திருக்கிறார். இனி அடுத்தது கருணாநிதியின் பேரன் வரப்போகிறார். இப்படி வழி வழியாக நடக்கும் குடும்ப ஆட்சியால் தமிழகத்திற்கு எப்போதும் எந்த பயனும் கிடைத்ததில்லை.

இவ்வாறு அவர் கூறினார்