கோவை மேட்டுப்பாளையத்தில் இபிஎஸ் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
இஸ்லாமிய மக்களே, சிந்தியுங்கள். நாங்கள் மக்கள் விரோத ஆட்சியை அகற்றவே பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். உடனே, மதவாதக் கட்சியோடு சேர்ந்துவிட்டோம் என்கிறார் ஸ்டாலின். பாஜக இந்திய நாட்டை ஆள்கிறது, ஸ்டாலினுக்கும் பிரதமர் மோடி தான். இந்தியாவில் ஒரு மாநிலம் தான் தமிழ்நாடு.
மதச் சாயத்தை பூசி வாக்குகளை பெற ஸ்டாலின் நாடகம் அரங்கேற்றி வருகிறார். அவர்கள் 1999 ஆண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளனர், வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சர் முரசொலி மாறன் இருந்தார். 2001 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தார்கள்.
அப்போதெல்லாம் பாஜக மதவாதக் கட்சி என்று தெரியாதா? ஒவ்வொரு கட்சிக்கும் தனிக் கொள்கை இருக்கிறது. கொள்கை வேறு, கூட்டணி வேறு. தமிழ்நாட்டை மீண்டும் ஏமாற்றலாம் என்று பழக்க தோஷம். ஊழல் ஆட்சியை அகற்றுவதற்குத்தான் கூட்டணி அமைத்தோம்.
இஸ்லாமியர்களுக்கு அதிமுக ஆட்சியில் நிறைய சாதனைகள் செய்தோம், பல கோரிகைகளை நிறைவேற்றினோம், தமிழ்நாடு அமைதி பூங்காவாக விளங்க காரணம் 31 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்த அதிமுக. கண்ணை இமை காப்பதை போல சிறுபான்மை மக்களை காத்த கட்சி அதிமுக. இஸ்லாமியப் பெருமக்களுக்கு ஏராளமான திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறோம்.
2001ம் ஆண்டு முதல் ரமலானுக்கு நோன்புக் கஞ்சி தயாரிக்க 5400 மெட்ரிக் டன் அரிசி கொடுத்தோம், நாகூர் தர்காவுக்கு சந்தனக் கட்டைகள் விலையில்லாமல் கொடுத்தோம், ஹஜ் புனித யாத்திரைக்கு மத்திய அரசு மானியத்தை 2018ல் நிறுத்திவிட்டாலும், மாநில அரசு சார்பில் முதலில் 6 கோடி ரூபாய் மானியம் கொடுக்கப்பட்டது. பின்னர் 2021ல் இஸ்லாமியர்களின் கோரிக்கையை ஏற்று, மானியத் தொகை 12 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.
சென்னையில் ஹஜ் இல்லம் கட்ட 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது; ஹாஜிகளுக்கு மதிப்பூதியம், உலமாக்கள், மோதினார்களுக்கு ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டது; உலமாக்களுக்கு இருசக்கர வாகன மானியம் 25 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது. வக்ஃப் வாரியத்துக்கு ஆண்டு மானியம், பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் புனரமைப்பு நிதி வழங்கப்பட்டது.
இஸ்லாமியர்களுக்கு நேரடி நியமன முறையில் நிரப்பப்படாத பணியிடங்களுக்கு முன்கொணர்வு முறையை நீடிக்க அரசாணை வெளியிடப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையில் நாகூர் தர்கா குளக்கரை சேதமடைந்துவிட்டதால், அதனை சரிசெய்ய நானே நேரில் பார்வையிட்டு 4 கோடியே 25 லட்சம் ரூபாய் ஒதுக்கி சீரமைத்துக் கொடுத்தேன்.
சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் அமைக்கப்பட்டது; ஜனாதிபதி தேர்தலில் அப்துல்கலாமுக்கு ஆதரவு கொடுத்தது அதிமுக, எதிர்த்து ஓட்டுப்போட்டது திமுக. 2019ல் மறைந்த அப்துல்கலாம் நினைவாக கலை அறிவியல் கல்லூரி ராமேஸ்வரத்தில் தொடங்கப்பட்டது; 2017ல் திண்டுக்கல்லில் திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலி வாழ்க்கை வரலாறு குறித்த மணி மண்டபம் அமைக்கப்பட்டது;
கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுக்கு சென்னையில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. இஸ்லாமியர்களே சிந்தியுங்கள், எந்த அரசு சிறுபான்மை மக்களுக்குத் தேவையான திட்டங்கள் கொடுத்தது என்று சிந்தித்தால் வாக்களிப்பீர்கள்.” என தெரிவித்தார்.