தமிழக செய்திகள்

TN Election 2026 | திமுக கூட்டணியில் நிறைய கட்சிகள் என்கிறார் ஸ்டாலின். ஆனால் வாக்கு இல்லையே?- எடப்பாடி பழனிசாமி

அதிமுகவில் கூட்டணி எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் வலிமையானது. வாக்கு வங்கி நிறைந்த கட்சிகள் என்றார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் மாவட்டம், ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாழப்பாடியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

ஏற்காடு மக்கள் அனைவரும் வாழப்பாடியில் குவிந்திருக்கிறீர்கள். மக்கள் வெள்ளம் கடல் போல் காட்சியளிக்கிறது. தேர்தலில் நம் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு உங்கள் எழுச்சியே சாட்சி. ஏற்காடு தொகுதி அதிமுகவின் கோட்டை, சேலம் மாவட்டம் அதிமுகவின் எஃகு கோட்டை.

சேலம் மாவட்டத்தில் 2021 தேர்தலில் 11-க்கு 10 தொகுதிகள் வென்ற மாவட்டம். ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு முதல்வராக இருக்கலாம், சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை அதிமுக-தான் ஆண்டது. 2011 முதல் 2021 வரை சேலம் மாவட்டம் முழுவதும் மக்கள் கோரிக்கைகள் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டன.

என்டிஏ, அதிமுக இணைந்து தேர்தலை சந்திக்கிறோம், ஏற்காடு தொகுதிக்கு உஷாராணி நிறுத்தப்பட்டிருக்கிறார். வெற்றி வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள்.

திமுக கூட்டணியில் நிறைய கட்சிகள் என்கிறார் ஸ்டாலின். ஆனால் வாக்கு இல்லையே? அதிமுகவில் கூட்டணி எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் வலிமையானது. வாக்கு வங்கி நிறைந்த கட்சிகள். 2021-ல் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள்தான் தொடர்கின்றன. ஒரேயொரு கட்சி சேர்ந்திருக்கிறது, தேமுதிக. நாம் கஷ்டப்பட்டு உழைத்து வாய்ப்பு கொடுத்தோம், நம்மை மறந்துவிட்டார்கள். வெண்டிலேட்டர் பொருத்தப்பட்ட கட்சி அது. நாம்தான் உதவி செய்தோம், உதவி மறந்து நம்மை பேசுகிறார்கள்.

அதிமுகவைப் பொறுத்தவரை உதவி செய்பவர்களை ஏணியில் ஏற்றிவிடுவோம், திமுக உச்சியில் ஏறும்போது ஏணியை புடுங்கிவிடுவார்கள். 2021-ல் இருந்த கூட்டணி, விசிக, கம்யூனிஸ்ட், இஸ்லாமியக் கட்சிகள் எல்லாம் திமுக-வை தாங்கிப் பிடித்தார்கள். அப்படி முட்டுக்கொடுத்த கட்சிகளுக்கு என்ன நிலைமை.? திமுக-வை நம்பாதீங்க, மக்கள் பிரச்னையை எடுத்துச்சொல்லுங்கள் என்றேன், ஆனால் அவர்கள் கேட்கவில்லை.

மக்கள் பிரச்னையை பேசினால்தான் இயக்கம் வளரும், விதியில் போராட வேண்டும். திமுக கூட்டணி எல்லாம் மெளனமாக இருந்தார்கள், அரசுக்கு எதிராகப் பேசவில்லை. அதனால் மக்கள் செல்வாக்கு இழந்துவிட்டனர், இப்போது கம்யூனிஸ்ட்டுக்கு முன்பு கிடைத்த இடத்தை விட ஒரு இடம் குறைவு. இதுதான் ஸ்டாலின் கொடுத்த பரிசு. ஸ்டாலின் எப்போதும் கூட்டணிக் கட்சிகளுக்கு விசுவாசமாக இருந்ததில்லை.

எங்கள் கூட்டணிக்கு உயிரைக் கொடுத்து தொண்டர்கள் பாடுபடுவார்கள். நம்மை நம்பியவர்களுக்கு சின்னத்தைப் பெற்றுக்கொடுத்த கட்சி அதிமுக. எங்கள் தொண்டர்கள் தேனீக்களைப் போல சுறுசுறுப்பாக செயல்பட்டு, அதிமுக வேட்பாளரை விட கூட்டணி வேட்பாளருக்கு அதிகம் பாடுபட்டு வெற்றி பெற வைப்பார்கள். எம்ஜிஆர் எப்படி உயர்ந்த உள்ளம் கொண்ட தலைவராக இருந்தாரோ, அதுபோலவே எங்களை வளர்த்தார். ஆனால் கருணாநிதி, ஸ்டாலின் எல்லாம் அப்படியல்ல.

அதிமுகவில் தொண்டர் முதல் நிர்வாகி வரை தலைமை சொல்வதை நடைமுறைப்படுத்துபவர்கள், ராணுவத்தில் கேப்டன் உத்தரவவுக்குப் பணியாற்றுவது போன்று வேலை செய்வார்கள். அதனால் தான் நம் கட்சியை யாராலும் ஒன்றும் செய்யமுடியவில்லை. நான் விவசாயியாகப் பிறந்து படிப்படியாக வளர்ந்து முதல்வராகி பெரும்பான்மையை நிரூபிக்கும்போது ஸ்டாலின் செய்த அட்டூழியம் கொஞ்சநஞ்சமல்ல.

சட்டமன்றம் புனிதமான இடம், 8 கோடி மக்களை பிரதிபலிக்கும் இடம். அப்படிப்பட்ட இடத்தில் கேவலாமாக நடந்தனர். பெரும்பான்மயை நிரூபித்ததும் சட்டையைக் கிழித்துக்கொண்டு வீதியில் சென்றார். இப்போது அதிமுக பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும், அப்போது ஸ்டாலின் மனநிலை எப்படியிருக்கும் என்று நீங்களே கற்பனை செய்யுங்கள்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.