டிரோன் கேமரா மூலம் கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. இதனுடன், 'டைகர்' என்ற மோப்ப நாயையும் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபடுத்தி உள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கருமாங்கழனி கிராமத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கல்பனா என்பவர் தனது குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது 8 வயது மகள்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்பனா தனது சொந்த மாநிலமான ஜார்கண்டிற்கு சென்றார். இதையடுத்து சிறுமி தனது தாத்தா, பாட்டியுடன் தங்கி இருந்தார். கடந்த 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சிறுமி வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் திரும்பி வரவில்லை. அவர் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலை அருகே நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது. பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால் இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
ஸ்ரீபெருமந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்திவாசன் தலைமையில் சிறுமியைத் தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக, சிறுமியின் புகைப்படத்துடன் கூடிய அறிவிப்புகளை ஆட்டோக்களில் ஒட்டி, கிராமம் முழுவதும் ஒலி பெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர். மேலும், டிரோன் கேமரா மூலம் கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. இதனுடன், 'டைகர்' என்ற மோப்ப நாயையும் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபடுத்தி உள்ளனர்.
இந்த தேடுதல் பணியின்போது மாயமான சிறுமியின் வீட்டில் இருந்து 2 தெருக்கள் தள்ளி உள்ள அவரது உறவினர் வீட்டை மோப்ப நாய் டைகர் 2 முறை சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்தப் பகுதியிலும் தேடுதல் பணி தீவிரமாக நடந்து வருகிறது. எனினும் இதுவரை சிறுமி குறித்த தகவல் கிடைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.