தமிழக செய்திகள்

இந்தியாவில் பிறந்தும் 35 ஆண்டுகளாக அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்கள்

வாழவந்தான்கோட்டை முகாமில் வசிப்பவர்களில் பாதி பேர் இந்தியாவில் பிறந்தவர்கள் ஆவர்.

இந்தியாவில் பிறந்து 35 ஆண்டுகள் கடந்தும் இவர்கள் அகதிகளாகவே நடத்தப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள 106 அகதிகள் முகாம்களில் சுமார் 73,241 இலங்கை அகதிகள் பதிவு செய்யப்பட்டு வசித்து வருகின்றனர். இதில் திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை இலங்கை அகதிகள் முகாமில் மட்டும் சுமார் 425 குடும்பங்களை சேர்ந்த 1,800-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.

10க்கு10 அறை

1990ல் அமைக்கப்பட்ட இந்த முகாமில் பள்ளி, கல்லூரி செல்பவர்கள் உள்பட சுமார் 30 சதவீதத்திற்கும் அதிகமான இளைஞர்களும் குழந்தைகளும் உள்ளனர். ஒரு குடும்பத்திற்கு 10க்கு 10 அளவுள்ள அறையே வழங்கப்பட்டுள்ளது. தோட்ட குடியிருப்புகளை விட மோசமாக உள்ள நிலையில், பொதுக் கழிப்பறையையும் பொதுத்தண்ணீரையும் மட்டுமே அவர்கள் நம்பி வாழ்கின்றனர்.

அங்கன்வாடி மையம்

தமிழ்நாடு அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் இவர்களுக்குக் கிடைக்கின்றன. அங்கன்வாடி மையம், குடும்ப அட்டை, சிறிய அளவிலான உதவித்தொகை மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. மேலும், ஆதார், வங்கிக் கணக்கு, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் கடன் உதவிகள் பெற்று, சுற்று வட்டார பகுதிகளில் வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

கட்டுப்பாடுகள்

அகதிகளை உறுதி செய்ய வருவாய்த்துறை சார்பில் 15 நாட்களுக்கு ஒருமுறை அணிவகுப்பு நடத்தப்படுகிறது. 3 மாதங்கள் முகாமில் இல்லாவிட்டால் பதிவில் இருந்து நீக்கப்பட்டு, மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

இலங்கை கடவுச்சீட்டு பெற முகாம் அலுவலரிடம் சான்றிதழ் பெற வேண்டும். அரசு வேலைக்கு செல்ல முடியாது, தேர்தல்களில் வாக்களிக்க முடியாது, நிலம் அல்லது வீடு வாங்க முடியாது. முகாமை விட்டு நீண்ட காலம் வெளியே தனித்திருக்க முடியாது. கல்வி அல்லது வேலைக்காக வெளியே தங்க வேண்டுமெனில் அரசு அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும்.

வாழவந்தான்கோட்டை

வாழவந்தான்கோட்டை முகாமில் வசிப்பவர்களில் பாதி பேர் இந்தியாவில் பிறந்தவர்கள் ஆவர். இந்தியாவில் பிறந்து 35 ஆண்டுகள் கடந்தும் இவர்கள் அகதிகளாகவே நடத்தப்படுகிறார்கள்.

முகாமில் உள்ளவர்களில் 80 சதவீதம் பேர் இந்தியவம்சாவளியினர். இவர்களின் மூதாதையர்கள் 100 முதல் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள். இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட தாங்கள், சொந்த தாய்நாட்டுக்கு திரும்பியபோதும் குடியுரிமை இன்றி நாடற்றவர்களாக வாழ்வதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

குடியுரிமை

இலங்கையை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம், தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு தடையாக உள்ளதாக கூறுகின்றனர். இது குறித்து உரிய அரசுத்துறைகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

வாழவந்தான்கோட்டை முகாமில் பிறந்து தமிழ்நாட்டில் வசிக்கும் வம்சாவளியினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்பதே இங்குள்ள மக்களின் ஏக்கமாக உள்ளது. அரை நூற்றாண்டு காலமாக நாடற்றவர்களாக வாழும் இவர்களின் பிரச்சினைக்கு ஐக்கிய நாடுகள் சபையும், உலக மனித உரிமை ஆணையமும் தலையிட வேண்டும் என்றும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா உடனடி தீர்வு காண வேண்டும் என்றும் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.

SCROLL FOR NEXT