தமிழக செய்திகள்

பிளவுபட்ட அ.தி.மு.க மீண்டும் இணைவு: சி.வி.சண்முகம் இன்று ராஜினாமா?

த.வெ.க.வில் இணையலாமா என்பது குறித்து சி.வி.சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமியை எஸ்.பி.வேலுமணி சந்தித்ததையடுத்து தேர்தல் தோல்வியால் பிளவுபட்ட அதிமுக இணைந்தது. இதனால், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தனித்துவிடப்பட்டார்.

இதனால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சி.வி.சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் உள்ள வீட்டில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சி.வி.சண்முகத்துடன் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அவரது ஆதரவாளர்களான 18 ஒன்றிய செயலாளர்கள். 3 நகர செயலாளர்கள், 4 பேரூர் செயலாளர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், சார்பு அணிகளின் நிர்வாகிகள் பலர் உள்ளனர்.

அவர்களுடன், கட்சியின் எதிர்கால நலன் கருதி எடப்பாடி பழனிசாமி அணியுடன் சேரலாமா அல்லது த.வெ.க.வில் இணையலாமா என்பது குறித்து சி.வி.சண்முகம் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் விழுப்புரம் மாவட்ட செயலாளர் பசுபதி உள்ளிட்ட சில மூத்த நிர்வாகிகள், சி.வி.சண்முகத்தை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்க கூடாது, சேர்த்தால் நாங்கள் வெளியேறுவோம் என்று கூறி வருகிறார்கள்.

இது அரசியல் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சி.வி.சண்முகம் தனது எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் உடன்பாடு எட்டப்படாததால் ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.