புரட்டாசி சனிக்கிழமை நாளில் பக்தர்கள் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி 14 வைணவ தலங்களுக்கு ஒரே நாளில் செல்லும் வகையில் பஸ் சேவை இயக்கப்பட்டதால் முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் உற்சாகத்துடன் புறப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நவக்கிரக தலங்கள் அமைந்துள்ளன. இந்த நவக்கிரக தலங்களை ஒரே நாளில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் கடந்த ஆட்சியில் நவக்கிரக சிறப்பு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்த தால் இந்த நவக்கிரக ஆன்மிக சுற்றுலா பஸ் தினமும் இயக்கப்படுகிறது.
இதேப்போல், ஸ்ரீ வைஷ்ணவ திவ்யதேச தலங்களுக்கு ஒரே நாளில் செல்லும் வகையில் ஆன்மிக சுற்றுலா பஸ் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து, பொது மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க கும்பகோணம், மயிலாடுதுறை மற்றும் சீர்காழி நகரை சுற்றியுள்ள 14 வைணவ தலங்களுக்கு ஒரே நாளில் செல்லும் வகையில் ஆன்மிக பஸ் சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டம் சார்பில் ‘திருநாங்கூர் ஸ்ரீ வைஷ்ணவ திவ்யதேச ஆன்மிக சுற்றுலா பஸ்’ சேவை இன்று (சனிக்கிழமை) முதல் தொடங்கப்பட்டது. இந்த பஸ் சேவையை கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தட்சிணாமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பஸ்சில் இன்று முன்பதிவு செய்திருந்த சுமார் 36 பயணிகள் பயணம் செய்தனர்.
வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் இந்த பஸ்சானது காலை 5 மணிக்கு கும்பகோணம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, சீர்காழி தாடாளன் பெருமாள் கோவில் (விண்ணகரம்), திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவில், திருநகரி கல்யாண ரங்கநாதர் கோவில், திருமணிக்கூடம் வரதராஜர் பெருமாள் கோவில், திருநாங்கூர் வைகுந்தநாதர் கோவில், திருநாங்கூர் வன்புருஷோத்தம பெருமாள் கோவில், திரு நாங்கூர் செம்பொன்செய் பெருமாள் கோவில், திருநாங்கூர் பள்ளிகொண்ட பெருமாள் கோவில், திருநாங்கூர் குடமேடு கூத்தர் கோவில் (அரிமேய விண்ணகரம்), திருநாங்கூர் நாராயண பெருமாள் கோவில் (மணி மாடக்கோவில்), திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோவில், சேங்கனூர் சீனிவாச பெருமாள் கோவில், நாச்சியார்கோயில் சீனிவாச பெருமாள் கோவில், கும்பகோணம் சாரங்கபாணி ஆகிய 14 வைணவ தலங்களுக்கு சென்று மீண்டும் இரவு 8 மணிக்கு கும்பகோணம் வந்தடையும்.
இதற்கு பயண கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.1,350 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வைணவ தலங்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்ல விரும்பு பவர்கள் www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். புரட்டாசி சனிக்கிழமை நாளில் பக்தர்கள் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி 14 வைணவ தலங்களுக்கு ஒரே நாளில் செல்லும் வகையில் பஸ் சேவை இயக்கப்பட்டதால் முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் உற்சாகத்துடன் புறப்பட்டனர்.