நெடுஞ்சாலை துறையினர் சாலையில் அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் உடனடியாக அமைக்க வேண்டும் என்று பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மாமல்லபுரம் அடுத்த கோவளத்தில் கடந்த ஆகஸ்டு 20-ந் தேதி தென்மாநில முதல்வர்கள் அடங்கிய 31-வது தென் மண்டல குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக வந்த மத்திய மந்திரி அமித்ஷா மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்ப்பதற்கான திட்டம் இருந்தது. பின்னர் இந்த திட்டம் தவிர்க்கப்பட்டு அமித்ஷா மாமல்லபுரம் வர வில்லை. எனினும் அமித்ஷா செல்ல பாதுகாப்பு அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்ட கார் வழிப்பாதையான கோவளம் சாலை, கலங்கரை விளக்கம், ஐந்துரதம் சாலை, கடற்கரை சாலை, அர்ச்சுனன் தபசு, டி.கே.எம் சாலை பகுதிகளில் இருந்த வேகத்தடைகள் அனைத்தையும் நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் வைத்து அகற்றி இருந்தனர்.
இந்த நிலையில் வேகத்தடைகள் அகற்றப்பட்டு 50- நாட்களுக்கு மேலாகியும் அந்த பகுதிகளில் இதுவரை மீண்டும் வேகத்தடைகள் அமைக்கப்படவில்லை. இந்த பகுதிகள் அனைத்தும் நகரின் உள்ளே வருவதால், எப்போதும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் செல்வதும், நடந்து செல்லும் மக்கள் கூட்டமும் அதிகமாக இருக்கும். வேகத்தடைகள் இல்லாததால் வேகமாக செல்லும் வாகனங்களால் அப்பகுதியில் விபத்துகள் ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே நெடுஞ்சாலை துறையினர் சாலையில் அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் உடனடியாக அமைக்க வேண்டும் என்று பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.