தர்மபுரி:
தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி ஆகம விதிகள்படி கோவில் வளாகத்திலேயே சாமி பல்வேறு வாகனங்களில் உற்சவம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) தைப்பூசத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், அலங்கார சேவை நடைபெற்றது.
பின்னர் சாமிக்கு சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக தைப்பூசத் திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து இன்று இரவு சாமி திருக்கல்யாணம் மற்றும் பொன்மயில் வாகனத்தில் சாமி உற்சவம் நடக்கிறது. நாளை விநாயகர் தேரோட்டமும், நாளை மறுநாள் சுப்ரமணியசாமி தேரோட்டமும் நடைபெறுகிறது. மிகவும் விசேஷமாக நடைபெறும் தேரோட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதன்காரணமாக ஆகம விதிகள்படி கோவில் வளாகத்திலேயே எளிமையான முறையில் தேரோட்டம் நடத்த விழா குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்து வருகிறார்கள்.
அன்னசாகரம், நெசவாளர் நகர் தைப்பூசத் திருவிழாவையொட்டி தர்மபுரி அன்னசாகரம் சிவசுப்ரமணிய சாமி கோவில், நெசவாளர் நகர் வேல் முருகன் கோவில், எஸ்.வி.ரோடு சுப்ரமணிய சாமி கோவில், உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.