தமிழக செய்திகள்

சிறப்பு தகுதித் தேர்வு முடிவு வெளியீடு - ஆசிரியர்கள் 5 நாட்களுக்குள் தகுதி சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்

அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான இந்த சிறப்பு தேர்வு ஜூலை மாதம் நடந்தது.

ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதி தேர்வில் தகுதி பெற்ற தேர்வர்கள் 5 நாட்களுக்குள் தங்களது தகுதி சான்றிதழை (இ சர்டிபிகேட்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழகத்தில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது.

அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான இந்த சிறப்பு தேர்வு ஜூலை மாதம் நடந்தது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை 59 ஆயிரத்து 535 பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 929 பேரும் எழுதினர்.

இதைத்தொடர்ந்து தனித் தேர்வுக்கான உத்தேச விடைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் கடந்த ஜூலை மாதம் 15 -ந்தேதி வெளியிட்டு தேர்வர்களின் அனைத்து ஆட்சேபனைகளும் பாடவாரியாக வல்லுனர் குழு மூலம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது.

தொடர்ந்து பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அரசாணைகளின்படி குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் இறுதி விடை குறிப்புடன் நேற்று இரவு வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வில் தகுதி பெற்ற தேர்வர்கள் 5 நாட்களுக்குள் தங்களது தகுதி சான்றிதழை (இ சர்டிபிகேட்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் புதுச்சேரி அரசு பள்ளி கல்வித்துறை செயலர் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் புதுச்சேரி தேர்வர்களுக்கு அவர்களது மதிப்பெண்கள் மட்டும் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படுகிறது.

இந்த தேர்வர்களின் ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் புதுச்சேரி அரசு பள்ளி கல்வித்துறையால் வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்து உள்ளது.

SCROLL FOR NEXT