அவல், பொரி, தோரணம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய கோயம்பேடு மார்க்கெட்டில் 1.5 ஏக்கர் பரப்பளவில் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் மற்றும் அதிகாரிகள் இணைந்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நவராத்திர பண்டிகையை முன்னிட்டு அவல், பொரி, வாழைக்கன்று, தோரணம், பூசணிக்காய் உள்ளிட்ட பூஜை பொருட்களை விற்பனை செய்யும் பொருட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை அமைப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது.
கடந்த ஆண்டுகளில் செயல்படுத்தியவாறு உணவு தானிய அங்காடியில் 1.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு சந்தை இன்று முதல் 23-ந்தேதி வரை செயல்படுத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் கார்த்திகா தலைமையில் அங்காடி நிர்வாக குழுவின் அலுவலர்கள், காவல் துறை, தீயணைப்பு துறை, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டம் வியாபார பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் இச்சந்தையில் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது மற்றும் வாகன நெரிசல் ஏற்படாவண்ணம் அங்காடி நிர்வாக குழு அலுவலர்களை பணியில் ஈடுபடுத்துவது உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டது.