தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பொதுமக்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் 9,000 சிறப்பு பஸ்களை இயக்குகிறது. கிளாம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பயணிகள் எளிதாக பஸ்களை அடையாளம் காண விழிப்புணர்வு சுவரொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகை 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகின்ற நிலையில் சொந்த ஊர் செல்லும் பொதுமக்களுக்கு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.
ஏற்கனவே தீபாவளியை ஒட்டி சென்னையில் இருந்தும், பிற நகரங்களில் இருந்தும் செல்லக்கூடிய ரெயில்களில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன. இதனால் தெற்கு ரெயில்வே 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரெயில்களை அறிவித்தது.
சென்னை மற்றும் அதனையொட்டிய சுற்று வட்டார பகுதியில் இருந்து பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல 2 மாதங்களுக்கும் முன்பே முன்பதிவு செய்தாலும் கூட கடைசி நேரத்தில் பயணம் செய்கின்ற மக்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பண்டிகையை கொண்டாட செல்லும் பொதுமக்கள் வசதிக்காக தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமையும் அரசு விடுமுறை அளித்து உள்ளது. இதனால் 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்து உள்ளதால் வெளியூர் பயணம் அதிகரித்து உள்ளது.
அரசு பணியில் இருப்பவர்கள் சிலர் நாளை (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் விடுப்பு கொடுத்து விட்டு நெரிசல் இல்லாமல் இன்று பயணம் மேற்கொள்கின்றனர். சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இன்று முதல் 3 நாட்கள் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 9 ஆயிரம் சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளன.
தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லக்கூடிய அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள் நெரிசல் இல்லாமல் குறித்த நேரத்தில் செல்லும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை போக்குவரத்து கழகம் செய்துள்ளது.
கிளாம்பாக்கம் பஸ் நிலையம், கோயம்பேடு, மாதவரம் பஸ் நிலையங்கள் தவிர மறைமலைநகர் மற்றும் கிளாம்பாக்கம் சி.எம்.டி.ஏ. காலநிலை பூங்கா அருகில் உள்ள திறந்தவெளி இடத்தில் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி பாதுகாப்பாகவும், வசதியாகவும் பயணிக்க வேண்டும் என்ற அடிப்படையில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் சிறப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
தற்காலிக பஸ் நிலையங்களில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 2 தற்காலிக பஸ் நிலையங்களில் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதை அவர் உறுதி செய்தார். மேலும் பயணிகள் வசதிக்காக ரூ.10-க்கு குடிநீர் பாட்டில் விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கும்பகோணம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பயணிகள் தற்காலிக பஸ் நிலையத்தில் சிறப்பு பஸ்களை எளிதாக அடையாளம் கண்டு பயணம் செய்ய விழிப்புணர்வு சுவரொட்டிகள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் எந்த ஊருக்கு, எந்த பஸ் நிலையத்தில் இருந்து, எந்தெந்த பஸ்கள் இயக்கப்படுகின்றன என்பதை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், மாநகரப் போக்குவரத்து கழக பஸ்களில் விழிப்புணர்வு விளம்பர சுவரொட்டிகள் பயணிகளின் பார்வைக்காக ஒட்டப்பட்டு உள்ளது.
சொந்த ஊர் செல்லக்கூடிய பயணிகள் எவ்வித குழப்பமும் இல்லாமல் அந்தந்த பஸ் நிலையங்களுக்கு சென்று பயணம் செய்ய ஏதுவாக போக்குவரத்து கழக ஊழியர்கள் அதிகாரிகள் பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பஸ் நிலையங்களில் ஒலிபெருக்கி மூலமும் சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்து அவ்வப் போது தகவல் தெரிவிக்கப்படுகிறது.
தாம்பரம், கோயம்பேடு, மாதவரம் பஸ் நிலையங்களில் கூடுதல் மாநகர பஸ் சேவை அதிகரிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் மாநகர பஸ்கள் மற்றும் மின்சார ரெயில்கள் வழியாக வெளியூர் செல்லக் கூடிய பஸ் நிலையங்களை அணுகுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் வசிக்கக்கூடிய வெளியூர் மக்கள் இன்று மாலையில் இருந்து குடும்பம் குடும்பமாக பண்டிகையை கொண்டாட செல்கிறார்கள்.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் இன்று காலையில் இருந்து காணப்படுகிறது. ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணத்தை தொடங்கியுள்ளனர்.
ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் கொடுத்து பயணம் செய்ய முடியாதவர்கள் ரெயில்களில் நெரிசலில் சென்றாவது சொந்த ஊரை அடையலாம் என்று பயணத்தை தொடர்ந்து உள்ளனர்.
பஸ், ரெயில்கள் தவிர சொந்த வாகனங்களில் செல்வோரும் பயணத்தை இன்று தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.