தமிழக செய்திகள்

ரூ.400 கோடி லஞ்ச வழக்கு- அன்பில் மகேஷ் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

அரசியல் உள்நோக்கத்துடன் அன்பில் மகேஷ் கைது செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்தனர்.

ரூ.400 கோடி லஞ்ச வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால், ஜாமின் வழங்க முடியாது என நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த தி.மு.க. ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக கோடிக்கணக்கில் பணம் கைமாறியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைது

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் தி.மு.க. பிரமுகரும் தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகியுமான அரசக்குமார் மூலமாக ரூ.100 கோடி வரையில் லஞ்சப் பணம் பெற்றதாக முதலில் கூறப்பட்டது. இப்போது கோர்ட்டில் போலீசார் ரூ.400 கோடி வரை பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து முறைகேடாக பணம் பெற்றுள்ளதாக தெரிவித்து உள்ளனர். இந்த வழக்கில் கைதான அரசக்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

போலீஸ் காவல்

இந்த வழக்கில் அன்பில் மகேசை 3 நாட்கள் காவலில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். கடந்த வாரம் போலீஸ் காவல் முடிந்து அவர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

போலீஸ் காவலின் போது அன்பில் மகேசிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் போலீசார் பல்வேறு தகவல்களை திரட்டி இருப்பதாக கூறப்படுகிறது.

ஜாமின் மனு

இந்த நிலையில் அன்பில் மகேஷ் ஜாமின் கேட்டு தாக்கல் செய்திருந்த மனு லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் கடந்த வாரம் நீதிபதி சத்திய மூர்த்தி முன்பு விசார ணைக்கு வந்தது.

வழக்கு விசாரணையின் போது அன்பில் மகேஷ் தரப்புக்கும் அரசு தரப்புக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

தப்பிச் செல்ல மாட்டார்

அன்பில் மகேஷ் தரப்பில் மூத்த வக்கீல் அபுடு குமார் ஆஜராகி வாதாடினார். அவர் கூறும்போது, “அன்பில் மகேஷ் வீட்டில் கடந்த செப்டம்பர் 16-ந்தேதி போலீசார் சோதனை நடத்தினர். நேரிலும் அவர் போலீஸ் முன்பு விசாரணைக்கு ஆஜரானார். தற்போது 3 நாட்கள் காவலில் வைத்து விசாரித்துள்ளனர். அப்போது, போலீசாரின் அனைத்து கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்துள்ளார். போலீஸ் விசாரணைக்கு தேவைப்படும் அனைத்து ஆவணங்களும் கொடுக்கப்பட்டுவிட்டன. அன்பில் மகேஷ் செல்வாக்கு மிக்க நபர் என்று போலீசார் கூறினாலும், அவர் எங்கும் தப்பிச் செல்ல போவது இல்லை.

அரசகுமார் மோசடி

அதிகாரிகள், அரசியல்வாதிகளின் பெயரைச் சொல்லி தனியார் பள்ளிகளிடம் அரசகுமார் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளார்.

ஆனால், பள்ளிகளுக்கு அனுமதி வாங்கித் தராமல் மோசடி செய்துள்ளார். பணம் கொடுத்ததை வெளியில் சொன்னால் பள்ளிகளை இயங்க அனுமதிக்க முடியாது என்று மிரட்டியதாகவும் புகார் உள்ளது. அவர் வசூலித்த பணத்துக்கு மனுதாரர் பொறுப்பாக முடியாது.

புதிய நடைமுறை

லஞ்ச வழக்குகளை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீஸ் இருக்கும் போது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வழக்கை விசாரிக்கின்றனர். புதிய நடைமுறையை போலீசார் அறிமுகம் செய்துள்ளனர். விலை வாசி ஏறுவதைப் போல ரூ.100 கோடி லஞ்சம் என்பது தற்போது ரூ.400 கோடி என்று உயர்ந்துள்ளது.

இவ்வளவுப் பெரிய தொகையை புகார்தாரர்கள் எப்படி கொடுத்தனர்? இந்த பணம் எங்கிருந்து வந்தது? என்ற கேள்வி குறித்து போலீசார் விசாரிக்கவில்லை.

லஞ்சம் கொடுத்தவர்களுக்கு போலீசார் சட்ட ரீதியாக பாதுகாப்பு வழங்குகின்றனர். புகார்தாரர்கள் அரசகுமாரிடமும், இளங்கோவனிடமும்தான் பணத்தைக் கொடுத்துள்ளனர்.

இவ்வாறு அன்பில் மகேஷ் தரப்பில் பரபரப்பான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன.

போலீசார் எதிர்ப்பு

இதைத் தொடர்ந்து போலீஸ் தரப்பில் அன்பில் மகேசுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அரசியல் உள்நோக்கத்துடன் அன்பில் மகேஷ் கைது செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்தனர்.

தி.மு.க. பிரமுகர்கள் அரசகுமாரும், முத்துக்குமாரும் சங்கம் வைத்து லஞ்சம் வசூலித்துள்ளனர் என்றும் போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இப்படி இரு தரப்பு வக்கீல்களும் பரபரப்பான வாதங்களை எடுத்து வைத்தனர். வாதங்கள் தொடர்ந்து நடைபெற்ற நிலையில், மனு மீதான தீர்ப்பு நவ.10-ந்தேதி (இன்று) அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், அன்பில் மகேஷ் ஜாமின் கோரிய மனு மீதான தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது. அப்போது விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்ற காவல்துறை வாதத்தை ஏற்பதாக கூறி அன்பில் மகேஷ்-க்கு ஜாமின் இல்லை என்று கூறிய நீதிபதி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT