வாக்காளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
வேலூர் கலெக்டர் லீலா அலெக்ஸ், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை சீரமைத்தல் மற்றும் மறுசீரமைப்பு தொடர்பாக, கடந்த மாதம் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. கலெக்டர் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு, அதில் வரைவு வாக்கச்சாவடி பட்டியல் வழங்கப்பட்டது.
மேற்படி வாக்குச்சாவடிகளில் ஏதேனும் மாற்றங்கள், கோரிக்கைகள் மற்றும் ஆட்பேனைகள் இருப்பின் அதனை தெரிவிக்க கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் நாளை மறுநாள் முதல் அடுத்த மாதம் 11-ந் தேதி வரை மேற்கொள்ளப்படும். இதன் தொடர்ச்சியாக தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களும் பட்டியலில் பெயர் சேர்க்க, ஏற்கனவே உள்ள பதிவுகளில் திருத்தம் பெறவும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வருகிற 21 (சனிக்கிழமை), 22, (ஞாயிற்றுக்கிழமை), 28 (சனிக்கிழமை) மற்றும் 29-ந் தேதிகளில் நடைபெற உள்ள சிறப்பு முகாம்களில் பங்கேற்று விண்ணப்பங்களை பூர்த்தி வழங்கலாம்.
இதற்காக, படிவங்கள் உரிய இடங்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் முகாம் நடைபெறும் நாட்களில் பணியில் இருப்பார்கள். தகுதியுள்ள வாக்காளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதை உறுதி செய்ய வேண்டும். தேவையான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.