தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், வார இறுதி நாட்கள் அடுத்தடுத்து வருவதாலும் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் அதிகளவில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
பயணிகளின் இந்த அதீத கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சென்னை மற்றும் இதர முக்கிய நகரங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையின் முக்கியப் பேருந்து முனையங்களில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குத் தினசரி அடிப்படையில் பேருந்துகள் பிரிக்கப்பட்டு இயக்கப்படுகின்றன.
வழக்கமான பேருந்து சேவைகளுடன் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை கூடுதலாக 290 பேருந்துகளும், நாளை மறுநாள் 595 பேருந்துகளும், 23-ந்தேதி 650 பேருந்துகள் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை முதல் 23-ந்தேதி வரை 120 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதாவரத்திலிருந்து நாளை முதல் 23-ந்தேதி வரை 25 பேருந்துகளும் மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வார இறுதியில் பயணம் செய்வதற்காக இதுவரை வியாழக்கிழமை அன்று 6,022 பயணிகளும், வெள்ளிக்கிழமை அன்று 10,791 பயணிகளும், சனிக்கிழமை அன்று 7,761 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று 1,06,450-க்கும் மேற்பட்ட பயணிகளும் தங்களது பயணத்தை ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.
பயணிகள் கடைசி நேரக் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், தங்களது இருக்கைகளை உறுதி செய்யவதற்கு அரசு அதிகாரப்பூர்வ இணையதளம் (tnstc.in) அல்லது TNSTC Mobile App வழியாக முன்கூட்டியே தங்களது பயணத்தை முன்பதிவு செய்யுமாறு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், பேருந்து இயக்கங்களைச் சீராகக் கண்காணிக்க அனைத்து முக்கியப் பேருந்து நிலையங்களிலும் போதிய எண்ணிக்கையிலான அலுவலர்கள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.