முதலமைச்சர் உத்தரவின்படியும், போக்குவரத்துத் துறை அமைச்சர் 08.09.2026 அன்று சட்டமன்றப் பேரவையில் வெளியிட்ட அறிவிப்பின்படியும், போதிய பொதுப் போக்குவரத்து வசதிகள் இல்லாத கிராமப்புற, மலைப்பாங்கான மற்றும் உட்புறப் பகுதிகளில் பள்ளி மாணவர்களின் வசதிக்காகப் பள்ளி நேரங்களுக்கு ஏற்ப காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட் சார்பில் மதுரை மண்டலத்தில் 8 பேருந்துகள், திண்டுக்கல் மண்டலத்தில் 5 பேருந்துகள் மற்றும் விருதுநகர் மண்டலத்தில் 4 பேருந்துகள் என மொத்தம் 17 சிறப்புப் பேருந்துகள் இன்று (09.10.2026) முதல் இயக்கப்படுகின்றன.
மதுரை மண்டலத்தில் திருமங்கலம் பேருந்து நிலையம் டி.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் வடபழஞ்சி அரசு மேல்நிலைப்பள்ளி, திருமங்கலம் பேருந்து நிலையம், கூடக்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி, பெரியார் பேருந்து நிலையம், யா. ஒத்தக்கடை அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம், –அனுப்பானடி சவுஷ்டிரா மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஆரப்பாளையம் பேருந்து நிலையம் – தெப்பக்குளம் தியாகராஜர் மாடல் மேல்நிலைப்பள்ளி, பெரியார் பேருந்து நிலையம் –முடுவார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, பெரியார் பேருந்து நிலையம், சேந்தமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய வழித்தடங்களில் 8 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மேற்கண்ட சிறப்புப் பேருந்துகள் காலை நேரங்களில் குறிப்பிட்ட பேருந்து நிலையங்களிலிருந்தும், மாலை நேரங்களில் சம்பந்தப்பட்ட பள்ளிகளிலிருந்தும் இயக்கப்படும். போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் போதிய போக்குவரத்து வசதியில்லாத பகுதிகளில் உள்ள 140 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 19,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப் படுகிறது.
மதுரை கோட்டத்திற்குட்பட்ட 17 பள்ளிகளைச் சேர்ந்த 2295 மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
எனவே, பள்ளி மாணவ, மாணவியர்கள் இச்சிறப்புப் பேருந்துகளைப் பயன்படுத்திப் பாதுகாப்பாகவும் வசதியாகவும் பள்ளிகளுக்குச் சென்று வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்தகவலை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் சரவணன் தெரிவித்து உள்ளார்.