தமிழக செய்திகள்

தேர்தலுக்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு திரும்ப சிறப்பு பஸ்கள் இயக்கம்

வாக்குபதிவு முடித்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பிடும் வகையில் தினசரி இயக்க கூடிய பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலான் இயக்குனர் ஆர். மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திடவும் வாக்குபதிவு முடித்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பிடும் வகையில் தினசரி இயக்க கூடிய பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி 25 மற்றும் 26-ந்தேதிகளில் பொதுமக்கள் சிரமமின்றி சென்னைக்கும் மற்ற ஊர்களுக்கும் பயணம் செய்திட ஏதுவாக 25-ந்தேதி தினசரி இயக்ககூடிய 2 ஆயிரத்து 92 பஸ்களுடன் கூடுதலாக ஆயிரத்து 295 பஸ்களும் முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 2 ஆயிரத்து 500 சிறப்பு பஸ்களும், 26-ந்தேதி சென்னைக்கு தினசரி இயக்க கூடிய 2 ஆயிரத்து 92 பஸ்களுடன் 3 ஆயிரத்து 184 சிறப்பு பஸ்களும் பிற ஊர்களுக்கு 3 ஆயிரத்து 345 சிறப்பு பஸ்களும் என ஒட்டு மொத்தமாக 14 ஆயிரத்து 508 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.