தமிழக செய்திகள்

TN Assembly Election| கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

3,431 பேருந்துகள் இயக்கப்பட்டு, 1,88,705 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சென்னை:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்ட வட மாவட்ட பகுதி மக்கள் தேர்தலுக்கு தங்கள் சொந்த ஊரில் சென்று வாக்களிக்க கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆர் மோகன் தெரிவித்திருக்கிறார்.

கிளாம்பக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருநெல்வேலி, ராமேஸ்வரம், தூத்துக்குடி காரைக்குடி, மதுரை, கோவில்பட்டி, தென்காசி, குற்றாலம், கன்னியாகுமரி, திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், கும்பகோணம், விழுப்புரம், திண்டிவனம் போன்ற ஊர்களுக்கு செல்ல வழக்கமாக 2092 பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 1339 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 3,431 பேருந்துகள் இயக்கப்பட்டு, 1,88,705 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

நேற்று இரவு இரண்டு மணி வரை பயணிகள் பேருந்து நிலையத்திலிருந்து கூடுதலாக முப்பதுக்கு மேற்பட்ட பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இன்றைய தினத்திற்கு 18,363 பேர் முன்பதிவு செய்துள்ளனர். எனவே கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.