தமிழக செய்திகள்

வண்டலூர் பூங்காவில் கோடை வெப்பத்தை சமாளிக்க விலங்குகளுக்கு சிறப்பு ஏற்பாடு| Vandalur Zoo

பார்வையாளர்களின் வசதிக்கும் கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

மாலை மலர்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. சிறந்த பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா தலமாக விளங்கி வரும் வண்டலூர் பூங்காவுக்கு தினந்தோறும் ஏராளமான பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள்.

வருகிற கோடை விடுமுறையையொட்டி பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் பூங்காவில் கூடுதல் உள்கட்டமைப்பு மற்றும் பார்வையாளர்களுக்கு வசதிகள் மேம்படுத்தப்படுகிறது.

சாலைகளைப் புதுப்பித்தும், பார்வையாளர்களின் பழைய ஓய்விடங்களை சீரமைத்தும் வருகின்றனர்.

பொதுமக்கள் நடந்து வரும் பாதையில் வெப்பத்தை தணிக்கும் வகையில் குழாய் மூலம் தண்ணீரை ஸ்பிரே மூலம் தெளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் விலங்குகள், பறவைகளுக்கு வரும் கோடையின் போது வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

விலங்குகளுக்கு குளிர்ச்சி தரும் காய்கறி, பழங்கள், புலிகள் இருக்கும் பகுதியில் அவை நீந்த கூடுதல் தண்ணீர், யானைகளுக்கு ஷவர் குளியல், பறவைகளின் கூண்டுகளுக்குள் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க அதன் மேல் பகுதியை சணல் சாக்குகளால் மூடி தண்ணீரால் நனைப்பது உள்ளிட்ட பணிகள் செய்யப்பட உள்ளன. இதேபோல் கோடையில் விலங்குகள் உற்சாகமாக இருக்கவும் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. சிங்கவால் குரங்குகள், நீலகிரி லங்கூர் குரங்குள் விளையாடுவதற்கு ஊஞ்சல்கள், சறுக்கு மரச்சட்டம் மற்றும் பிற அமைப்புகளையும் பூங்கா நிர்வாகத்தினர் ஏற்படுத்தி உள்ளனர். புதிதாக வந்துள்ள இமயமலைக் கருங்கரடிகளுக்கு, சறுக்கி விளையாடுவதற்காக மரத்தாலான இடம் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்த கோடையில் பார்வையாளர்கள், குழந்தைகள் பார்த்து மகிழும் இடமாக இருக்கும்.

பார்வையாளர்கள் மீது தண்ணீர் தெளிக்க வைக்கப்பட்டு உள்ள குழாய்.

இதுகுறித்து பூங்கா அதிகாரி மணிகண்டபாபு கூறும்போது, கோடை விடுமுறை நாட்களில், வார இறுதி நாட்களில் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் பார்வை யாளர்களின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை எட்டியது, இது கடந்த ஆண்டு 3.20 லட்சமாக உயர்ந்தது. ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையின் போது வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பார்வையாளர்களின் வசதிக்கும் கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இங்குள்ள விலங்குகள், பறவைகளுக்கு கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பூங்காவில் பராமரிப்பு காரணமாக லயன் சஃபாரி, மான் சஃபாரி பராமரிப்பு வருகிற 28-ந்தேதி வரை பார்வையாளர்களுக்கு மூடப்பட்டு உள்ளது. பூங்காவில் உட்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகிறது என்றார்.