சட்டசபை கூட்டத்தின் 2-வது நாள் அமர்வு இன்று நடைபெற்றது.
சபாநாயகர் தேர்தலில் ஆளும் கட்சியான த.வெ.க. சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்ற ஜே.சி.டி.பிரபாகர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வானார். சட்டசபை துணை சபாநாயகராக ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்டார்.
தேர்வு செய்யப்பட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, அமைச்சர் செங்கோட்டையன் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
இதைத்தொடர்ந்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு எம்எல்ஏக்கள் வாழ்த்துரை தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* கட்சி சார்பின்றி செயல்படுவேன். அனைவருக்கும் சம வாய்ப்பு அளிப்பேன். தரமான விவாதங்கள் நடக்கும்.
* அவையின் மாண்புகளை காப்போம். தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்ப்போம்.
* அரசியல் மோதல்களுக்காக மக்கள் நம்மை அவைக்கு அனுப்பவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
* முதல்வர் விஜயை மக்கள் இன்னொரு எம்ஜிஆராகத்தான் பார்க்கிறார்கள்.
* தேர்தலில் அலை வீசியது. விஜய் அலை. வெற்றி அலை. விசில் அலை. சாதி இனம் பாராமல் மக்கள் வெற்றி பெற செய்துள்ளனர்.
* போதையில்லா தமிழ்நாட்டை முன்னெடுக்க வேண்டும் என முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
* எவ்வளவோ பிரச்சனைகள் வந்தபோதும் ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதிப் புரட்சியை ஏற்படுத்தி விட்டார் முதல்வர் விஜய்.
* இப்படி ஒரு முதலமைச்சரா என தமிழகமே வியந்து பாராட்டுகிறது.
* தமிழக வெற்றிக் கழகம் புதிய சக்தியாக, புரட்சியாக உருவாகி உள்ளது.
* சாமானியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற விஜயால் தான் முடியும் என மக்கள் நம்பிக்கை.
இவ்வாறு அவர் கூறினார்.