தமிழக செய்திகள்

122-வது பிறந்த நாள்: சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு சபாநாயகர், அமைச்சர்கள் மரியாதை

சி.பா.ஆதித்தனார் ஏடு நடத்துவோருக்கும், எழுத்தாளர்களுக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தார்.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அரசு சார்பில் இன்று மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் 122-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள்

'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் 2019-ம் ஆண்டு முதல் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சி.பா.ஆதித்தனாரின் 122-வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், அமைச்சர்கள் ராஜ்மோகன், வெங்கடரமணன் மற்றும் அதிகாரிகள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள், பல்வேறு அமைப்பினர் மரியாதை செலுத்தினர்.

தினத்தந்தி

'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள காயாமொழி என்ற கிராமத்தில் 27.9.1905 அன்று பிறந்தார். வெளிநாட்டில் சட்டப்படிப்பு முடித்து பாரிஸ்டர் பட்டம் பெற்றார். கல்லூரியில் படிக்கின்ற நாட்களிலேயே சிறு தொழில்கள் செய்து முன்னேறுவது குறித்து பல கட்டுரைகளும், நூல்களும் எழுதியுள்ளார்.

1942-ம் ஆண்டு முதன்முதலாக 'மதுரை முரசு' என்ற வாரம் இருமுறை இதழையும், பின்னர் 'தமிழன்' என்ற வார இதழையும் தொடங்கினார். 1942-ம் ஆண்டு நவம்பர் மாதம் மதுரையில் 'தினத்தந்தி' நாளிதழை தொடங்கி வெளியிட்டார். தொடர்ந்து, 'மாலை முரசு' என்ற மாலைப் பத்திரிகையையும் 'ராணி' என்ற வார இதழையும் தொடங்கினார். பத்திரிகைகளில் மக்கள் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் தமிழ்ச்சொற்கள், சிறிய வாக்கியங்கள், கவர்ந்திழுக்கும் தலைப்புகள், கருத்துப் படங்கள் உள்ளிட்ட யுக்திகளைக் கையாண்டார்.

சபாநாயகராக...

நாளிதழில் ஏராளமான படங்களுடன் செய்திகளை வெளியிட்டு தமிழ் இதழியல் துறையில் முத்திரை பதித்தார். 1942-ம் ஆண்டு முதல் 1953-ம் ஆண்டு வரை தமிழக சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், 1957-ம் ஆண்டு முதல் 1962-ம் ஆண்டு வரை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றினார்.

1967-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில் சட்டசபை சபாநாயகராக பணியாற்றினார். அப்போது, சட்டப்பேரவை விதிகள் ஆங்கிலத்தில் இருப்பது பொருத்தமாக இருக்காது என்பதை அறிந்து தமிழில் மொழிபெயர்த்தார்.

திருக்குறள் கூறி அவையை ஆரம்பிக்கும் நடைமுறையைக் கொண்டு வந்தார். அமைச்சர்கள் உள்ளிட்டோரை 'மாண்புமிகு' என்று அழைக்கும் முறையைக் கொண்டு வந்தார். கருணாநிதி முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் 1969-ல் கூட்டுறவு மற்றும் விவசாய அமைச்சராகவும் திறம்பட பணியாற்றினார்.

தமிழ் மீதும், தமிழர் மீதும் மாறாப் பற்றுக் கொண்டு தம் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டதனால், அனைவராலும் தமிழர் தந்தை என அன்போடு அழைக்கப்பட்டார். சி.பா.ஆதித்தனார் ஏடு நடத்துவோருக்கும், எழுத்தாளர்களுக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தார்.

SCROLL FOR NEXT