தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு அ.தி.மு.க.வில் வெடித்த உள்கட்சி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
அ.தி.மு.க. சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 47 எம்.எல்.ஏ.க்களில் 25 பேர் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோரது தலைமையில் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள்.
சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் மீதான நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பின்போது அ.தி.மு.க. கட்சி தலைமையின் உத்தரவுக்கு எதிராக 25 எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து 25 எம்.எல்.ஏ.க்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகரிடமும் சட்டமன்ற செயலாளரிடமும் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில் எஸ்.பி. வேலுமணி, சி.பி.சண்முகம் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் தங்கள் தரப்பில் சட்டமன்ற கொறடாவை தேர்வு செய்து சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்.
இப்படி அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் 2 வாரங்களுக்கு மேலாக தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்கள்
கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த குழப்பம் காரணமாக எடப்பாடி பழனிசாமி சென்னையிலேயே முகாமிட்டு தொடர்ந்து தனது ஆதரவாளர்களோடு ஆலோசித்து வருகிறார்.
விஜய் ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்த 25 எம்.எல்.ஏ.க்களின் மாவட்ட செயலாளர் பதவியை பறித்துவிட்டு அவர்களுக்கு பதிலாக புதிய மாவட்ட செயலாளர்களையும் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு தமிழக வெற்றிக் கழகமே காரணம் என்று குற்றம்சாட்டி நேற்று பரபரப்பான அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால் அதற்கு அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் எதிர்ப்பாளர்களும் எடப்பாடி பழனிசாமியின் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. தனி அணியாக செயல்படுவதில் அவர்கள் உறுதியாக இருப்பதாகவே கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் சென்னையில் இன்று எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தினார். அடையாறு பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் வைத்து இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திடீரென அ.தி.மு.க. தலைமை கழகத்தில் வைத்து கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி இன்று காலை 9 மணி அளவில் வருகை தந்தார்.
அவரை அங்கு கூடியிருந்த கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் மறைந்த அ.தி.மு.க. தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, ஆர்.பி. உதயகுமார், ஓ. எஸ். மணியன் , அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அதிருப்தி அணியில் உள்ள முன்னணி நிர்வாகிகள் எம்.எல்.ஏ.க்கள் யாரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 47 பேரில் மூன்றில் 2 பங்கு எம்.எல்.ஏ.க்கள் தனி அணியாக செயல்பட்டால் மட்டுமே சட்டசபையில் அவர்களுக்கு தனி அணி அங்கீகாரம் கிடைக்கும். அதன்படி பார்த்தால் எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு 32 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை ஆனால் 25 பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்து உள்ளதால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சபாநாயகரால் தனி அணியாக அறிவிக்க முடியாது.
அதே நேரத்தில் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 25 எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக சபாநாயகரிடம் முறைப்படி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அடுத்த கட்டமாக 25 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீதும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் இன்றைய கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
25 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்குவதற்கு சபாநாயகர் முடிவெடுக்காத பட்சத்தில் அடுத்த கட்டமாக கோர்ட்டை அணுகி சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளார். இன்றைய கூட்டத்தில் அது பற்றியும் முக்கியமாக விவாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த கூட்டத்தின் முடிவில் அடுத்த கட்டமாக கட்சியின் வளர்ச்சி பணிகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் 25 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றியும் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பிரிந்து சென்றவர்களை அழைத்துப் பேசி அவர்களோடு சமாதானமாக செல்வது பற்றியும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க.வினர் இரண்டு பிரிவாக செயல்பட்டு வரும் நிலையில் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவடைந்த நிலையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டார். கட்சியின் மாநில நிர்வாகிகளை தனியாக அழைத்து ஆலோசனை நடத்திய அவர், வேலுமணி தரப்பு மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
வேலுமணி தரப்பு ஒரு புறமும், இபிஎஸ் தரப்பு மறுபுறமும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள சிவி சண்முகம் அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆலோசனையில் எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆலோசனை முடிந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.