இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு தென்மேற்கு பருவமழை தான் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை 4 மாதங்கள் இந்த பருவ மழை காலமாகும்.
கேரளாவில் தொடங்கி கடலோர கர்நாடகா, மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை படிப்படியாக தொடங்கி மழை பொழிவை கொடுக்கும்.
தமிழகம் மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளை (4-ந்தேதி) தொடங்குவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவுகள், கேரளா மற்றும் தமிழகத்தில் சில பகுதிகள், தென்மேற்கு, மேற்கு மத்தியம், கிழக்கு மத்தியம், வடகிழக்கு வங்காள விரிகுடாவின் சில பகுதிகள், சவுத் தென்கிழக்கு வங்காள விரிகுடாவை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகி வருகிறது.
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் பகுதிகளில் மழை பெய்யக் கூடிய வாய்ப்பு உள்ளது.
இதனால் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறையும். சூறாவளி காற்று வீசக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே ஜூன் மாதத்தில் வெப்பமும் அதை தொடர்ந்து மழையும் மாறி மாறி பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவ தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேக மூட்டத்துடன் சாரல் மழையும் தொடர்ந்து பெய்து வருவது தென்மேற்கு பருவமழையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.