தமிழக செய்திகள்

ரூ.24 கோடி மதிப்பில் தாம்பரம் ரெயில் நிலையம் நவீனமாக்கும் பணி- தெற்கு ரெயில்வே தகவல்

புதிய நடைமேம்பாலத்திற்குச் செல்ல கூடுதல் சாலை வசதி, மேற்குப் பகுதியில் வாகன நிறுத்துமிடத்துடன் கூடிய சுற்றுப்புறப் பகுதி மேம்பாடு, நடைமேடைகளில் மேற்கூரைகள் வசதிகள் ஆகியவையும் திட்டமிடப்பட்டுள்ளன.

சென்னையில் 3-வது மிகப்பெரிய ரெயில் முனையமாக தாம்பரம் ரெயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து நாள்தோறும் ரூ.1.6 லட்சம் பயணிகள் ரெயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, ரூ.24 கோடி மதிப்பீட்டில் தாம்பரம் ரெயில் நிலையம் நவீனமாக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக, ரெயில் நிலையத்தின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை இணைக்கும் வகையில், அனைத்து நடைமேடைகளையும் கடந்து செல்லும் வகையிலான 8 மீட்டர் அகலமுள்ள புதிய நடைமேம்பாலம் தற்போது பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இது நெரிசலைக் குறைக்கவும், பயணிகள் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு எளிதாகச் செல்லவும் உதவும். ஏற்கனவே உள்ள நடைமேம்பாலமும், புதிய பாலத்துடன் இணைந்து தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்.

இதேபோல, பயணிகளின் வசதிக்காக 9 மின்தூக்கிகள் மற்றும் 10 நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நகரும் படிக்கட்டுகளுக்கான சிவில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மின்தூக்கிகளைப் பொறுத்தவரை 6 மின்தூக்கிகள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது. மீதமுள்ளவை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவை அனைத்தும் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

மேலும், புதிய நடைமேம்பாலத்திற்குச் செல்ல கூடுதல் சாலை வசதி, மேற்குப் பகுதியில் வாகன நிறுத்துமிடத்துடன் கூடிய சுற்றுப்புறப் பகுதி மேம்பாடு, நடைமேடைகளில் மேற்கூரைகள் வசதிகள் ஆகியவையும் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த மேம்பாட்டு வசதிகள் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் சுமைகளுடன் வரும் பயணிகளுக்குப் பெரிதும் பயனுள்ளதாக அமையும். இந்தப் பணிகள் முழுமையடைந்த பின்னர், தாம்பரம் ரெயில் நிலையம் பயணிகளுக்குப் பாதுகாப்பான மற்றும் நவீன பயண அனுபவத்தைத் தரும் நிலையமாக வலுப்பெறும் என தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.