ரெயில் 
தமிழக செய்திகள்

ரெயில் பயணிகளின் கவனத்திற்கு... எழும்பூர் ரெயில்கள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு

திருச்சி-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (12654) மற்றும் மும்பை ஜி.எஸ்.டி.-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (22157) கடற்கரை வரையிலும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பயணிகள் எவ்வித சிரமமும் இன்றி சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்தே தங்களது பயணங்களை வழக்கமான அட்டவணைப்படி தொடரலாம்.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

எழும்பூர் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புப் பணி காரணமாக, செப்டம்பர் 1-ந்தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரையில் எழும்பூரில் இருந்து புறப்படும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்களும், மற்றப் பகுதியில் இருந்து எழும்பூருக்கு வரும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு, ரெயில்கள் வழக்கம்போல இயக்கப்படும்.

வழக்கம் போல இயக்கம்

குறிப்பாக, மன்னார்குடி-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16180) தாம்பரம் வரையிலும், சேலம்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (22154) மாம்பலம் வரையிலும், திருச்சி-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (12654) மற்றும் மும்பை ஜி.எஸ்.டி.-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (22157) கடற்கரை வரையிலும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேபோல, எழும்பூர்-மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் (16179) தாம்பரத்தில் இருந்தும், எழும்பூர்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (22153) சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புகள் திரும்ப பெறப்பட்டு, ரெயில்கள் வழக்கம்போல இயக்கப்பட உள்ளன.

இதனால், பயணிகள் எவ்வித சிரமமும் இன்றி சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்தே தங்களது பயணங்களை வழக்கமான அட்டவணைப்படி தொடரலாம்.