ரூ.21 கோடி செலவில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி நடைமேடை அமைப்பது அவசியமா என பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி இன்று பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிகளை பார்வையிட்டார்.
அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதிகளை அரசு பாதுகாக்க வேண்டும். இதற்கு கம்பி வேலி போட்டால் போதும். ஆனால் ரூ.21 கோடி செலவில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி நடைமேடை அமைக்கிறார்கள்.
10 அடிக்கு கான்கிரீட் கிரானைட் போட்டு நடைமேடை அமைப்பது அவசியமா? தடுப்பு சுவர் தேவையா? இது வெள்ளம் வரும் பகுதி.
சுற்றுச்சுவர் கட்டினால் சதுப்பு நில பகுதிக்கு தண்ணீர் செல்லாமல் குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் புகுந்து விடும். மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
கடலுக்குள் வெள்ளம் செல்ல வழிவகை செய்ய வேண்டுமே தவிர அதை தடுக்க கூடாது. முக்கியமாக ராம்சார் நிலத்தில் எந்த கட்டுமான பணிகளையும் மேற் கொள்ளக் கூடாது.
அதற்காகத்தான் பசுமை தாயகம் சார்பில் இன்று சதுப்பு நிலப் பகுதிகளை பார்வையிட்டோம். கடன் வாங்கி நடைமேடையும், சுற்று சுவரும் அமைக்கும் திட்டம் மக்களுக்கு தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.