தமிழக செய்திகள்

முழு கொள்ளளவை நெருங்கும் சோத்துப்பாறை அணை நீர்மட்டம்

அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கனமழை காரணமாக போடி அணைக்கரைப்பிள்ளையார், கும்பக்கரை, சுருளி, மேகமலை உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

2500 கன அடியாக உயர்வு

முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று முன்தினம் 197 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 1030 கன அடியாக அதிகரித்தது. இன்று காலை அணைக்கு நீர்வரத்து 2489 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதி விவசாய மற்றும் குடிநீர் தேவைக்காக 400 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள் மகிழ்ச்சி

நேற்று 116.90 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 117.90 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் அணையில் நீர்மட்டம் 1 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணையில் நீர் இருப்பு 2249 மி.கன அடியாக உள்ளது. 1½ மாதங்களுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தற்போது முதல் போக நெல் விவசாயம் நடைபெற்று வரும் நிலையில் நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 2ம் போக பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அணையின் நீர்மட்டம்

இதே போல் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டமும் 45.60 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 1010 கன அடியாக அதிகரித்து வருகிறது. அணையில் இருந்து 86 கன அடி நீர் திறக்கப்படுகிறது நீர் இருப்பு 1468 மி.கன அடியாக உள்ளது. 126.28 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 119.30 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 64 கன அடியாகவும், திறப்பு 3 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 88.74 மி.கன அடியாக உள்ளது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால் ஓரிரு நாளில் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 28.50 அடியாக உள்ளது. வரத்து 103 கன அடி. இருப்பு 63.93 மி.கன அடி.

வெள்ளப்பெருக்கு

கனமழை காரணமாக போடி அணைக்கரைப்பிள்ளையார், கும்பக்கரை, சுருளி, மேகமலை உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளனர்.

நீர்வரத்து குறையும் பட்சத்தில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். தேனி மாவட்டத்துக்கு இன்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் காலை முதலே பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.

மழை அளவு

ஆண்டிபட்டி 16.8, அரண்மனைபுதூர் 3.2, வீரபாண்டி 10.2, பெரியகுளம் 6, மஞ்சளாறு 7, சோத்துப்பாறை 6, வைகை அணை 4.6, போடி 10.8, உத்தமபாளையம் 3.8, கூடலூர் 21.4, பெரியாறு அணை 31.2, தேக்கடி 53.4, சண்முகாநதி 23.2 என ஒரே நாளில் 197.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT