திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியை சேர்ந்தவர் அஜ்மத் உசேன் (வயது 41). கூலித்தொழிலாளி. இவருக்கும், உடுமலையை அடுத்த அமராவதி பகுதியை சேர்ந்த தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில், கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் தஸ்லீமா பேகம், கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன், கடந்த 4 மாதங்களாக அமராவதியில் உள்ள தனது தாயார் ஆசியம்மாள் (48) வீட்டில் வசித்து வருகிறார். மேலும் கணவரை விவாகரத்து செய்வதற்கான முயற்சியிலும் அவர் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த அஜ்மத் உசேன் ஆத்திரம் அடைந்தார். மேலும் தனது மனைவி, குழந்தைகளுடன் சேர்ந்து வாழ அவர் விருப்பப்பட்டார்.
இந்த நிலையில், அமராவதியில் உள்ள மாமியார் வீட்டுக்கு அஜ்மத் உசேன் வந்தார். அங்கு தஸ்லீமா பேகம் மற்றும் குழந்தைகள் இல்லை. மாமியார் ஆசியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது தனது மனைவி, குழந்தைகள் குறித்து அஜ்மத் உசேன், ஆசியம்மாளிடம் கேட்டார். மேலும் அவர்களை தன்னுடன் சேர்ந்து வாழ்வதற்கு அனுப்பி வைக்கும்படி அவர் தனது மாமியாரிடம் கேட்டார். ஆனால் அதற்கு ஆசியம்மாள் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அஜ்மத் உசேன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆசியம்மாளை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் ஆசியம்மாள் அலறினார். அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் ஆசியம்மாள், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் அமராவதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து, ஆசியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜ்மத் உசேனை வலை வீசி தேடி வந்தனர். அப்போது, அவர் குதிரையாறு சோதனைச்சாவடி அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அங்கு சென்று அஜ்மத் உசேனை கைது செய்தனர். தனது மனைவியை தன்னுடன் அழைத்து செல்வதற்கும், மகன்களை பார்ப்பதற்கு மாமியார் இடையூறாக இருந்ததாலும் அவரை கத்தியால் குத்திக்கொலை செய்தேன் என்று அஜ்மத் உசைன் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். குடும்பத்தகராறில் மாமியாரை மருமகன் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.