சென்னை பெருங்குடி குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் பாபு லால் (வயது 48). இவர் அதே பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.
இவரது மனைவி சென்னி தேவி(43). இவர்களுக்கு ராகேஷ்(19) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
மகன் ராகேஷ் பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்ததால் வீட்டில் உள்ளார். ராகேசுக்கு சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.
இதற்காக தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மாத்திரை சாப்பிட்டு வருகிறார். இந்த நிலையில் பாபுலால் தனது உறவினர் இறந்து விட்டதால் ராஜஸ்தான் சென்று விட்டார்.
நேற்றிரவு சென்னி தேவி உள்ளிட்ட 3 பேரும் வீட்டில் ஒரே அறையில் தூங்கி கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலையில் திடீரென எழுந்த ராகேஷ் தூங்கிக் கொண்டிருந்த தாயார் சென்னிதேவியை துண்டால் கழுத்தை நெறித்து காய்கறி வெட்டும் கத்தியால் குத்தினார். பின்னர் உரலால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதனை கண்டு சென்னிதேவியின் மகள் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை வரவழைத்தார்.
தகவல் அறிந்து துரைப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலை செய்யப்பட்ட சென்னி தேவி உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராகேஷை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஓட்டேரி எஸ்.வி.எம்.நகரை சேர்ந்த நாகராஜ் மகன் பலி ஆடு என்ற அஜய் (வயது 20). பிரபல ரவுடியான இவர் நேற்று இரவு பழைய வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகரை சேர்ந்த காஜல் (24) என்ற திருநங்கையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். ராமதாஸ் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் திருநங்கையை இறக்கி விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்புவதற்காக மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 4 மர்ம நபர்கள் வந்தனர்.
அவர்கள் திடீரென்று அஜய்யை சுற்றி வளைத்து தாக்கி கத்தியால் குத்தினர். இதில் அஜய் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். உடனே கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
சினிமாவில் வருவது போல கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் வண்ணாரபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட அஜய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அஜய்யை கொன்றவர்கள் யார்? எதற்காக இந்த கொலை நடந்தது? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட அஜய்யும், அவரது நண்பரும் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு வந்தனர். பின்னர் இருவரும் இன்ஸ்டாவில் தனித்தனியாக ரீல்ஸ் போட தொடங்கினர்.
இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் இந்த கொலை நடந்திருப்பதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இதுபற்றி விசாரனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் ஒரே நாளில் ரவுடி, பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.