அடப்பாவி இப்படி ஒரு காரியத்தை எப்படிடா செய்தாய்? ஊரில் எத்தனையோ முதியோர் இல்லங்கள் இருக்கிறது? அங்கு கொண்டு விட்டு இருந்தால் கூட உனக்கு இப்படி கொலை பழி வந்து இருக்காதே? என்று போலீசாரும் பார்த்தசாரதியிடம் தெரிவித்து ஆதங்கப்பட்டனர்.
மண்ணுக்கு மரம் பாரமாக தெரிவதில்லை...
மரத்துக்கு கிளை பாரமாக தெரிவதில்லை....
பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமாக தெரிவதில்லை.
தான் பெற்ற குழந்தை முடமாகி போனாலும் அந்த குழந்தைக்காக தன் வாழ்நாளையே தியாகம் செய்கிறாள் தாய். ஆனால் பாழாய் போன பிள்ளைகளின் மனம் மட்டும் வயதான காலங்களில் பெற்றோரை அனாதையாக தவிக்க விட்டு செல்வதை கேள்விப்படும் போது மனித நேயம் உள்ள ஒவ்வொருவரின் இதயமும் நடுங்கி போகிறது.
தொலை தூரங்களில் இருந்து கண் தெரியாத, நடக்க இயலாத தாய், தந்தையரை நகரப் பகுதிகளில் அழைத்து வந்து வீதிகளில் விட்டு சென்ற சம்பவங்களை கேள்விப்பட்டு இருப்போம். இப்படி கல்லாகி போன பல பிள்ளைகள் தங்கள் பெற்றோரை கடைசி காலத்தில் படுத்தும் பாடுகளை பார்க்கும் போது இப்படியும் பிள்ளைகள் இருப்பார்களா? என்று கேட்க தோன்றுகிறது.
வீட்டில் இருக்கும் அம்மா தனது மகனிடம் உடம்பு சரியில்லையப்பா... ஆஸ்பத்திரிக்கு போகணும் என்றால் பர்சில் இருந்து ரூபாயை எடுத்துக் கொடுத்து ஆட்டோ பிடித்து போய் வா என்று சொல்லி விட்டு மகன் வேலைக்கு போய் விடுகிறான். நடக்க முடியாத அந்த பரிதாபத்துக்குரிய தாய் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் ஆட்டோ பிடித்து செல்வார். அதுவே மனைவிக்கு லேசான தலைவலி என்று அறிந்ததும் அலுவலகத்திற்கு பாதிநாள் விடுப்பு போட்டு விட்டு ஓடி வந்து ஆதரவாக அணைத்தபடியே ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வார். ஆனால் இந்த வாழ்க்கை வீட்டில் முடங்கி கிடக்கும் பெற்றோரால் கிடைத்தது என்பதை ஏனோ மனங்கள் புரிந்து கொள்ள மறுக்கிறது.
கடைசி காலத்தில் இப்படித்தான் வயதானவர்களை வீதியில் விட்டு விடுவார்கள் என்பதை உணர்ந்ததால்தான் இன்று வீதிகள் தோறும் முதியோர் இல்லங்கள் முளைத்து வருகின்றன.
அப்படி இருந்தும் கொல்லும் அளவிற்கு பிள்ளைகள் மனம் கல்லாகி போவதை நினைக்கும் போது கண்ணீர் பெருகுகிறது. அப்படி ஒரு சம்பவம் திருத்தணி அருகே அரங்கேறி இருக்கிறது.
திருத்தணியில் இருந்து அரக்கோணம் செல்லும் பாதையில் மணவூர் ரெயில் நிலையத்தில் ரெயிலில் அடிப்பட்டு மூதாட்டி ஒருவர் சடலமாக கிடந்தார். முதிர்ந்த அந்த தேகம் சிதைந்து சின்னாபின்னமாகிக் கிடந்தது. பக்கத்திலேயே ஒரு வீல்சேரும் சுக்குநூறாகி துண்டு துண்டாக அங்கொன்றும், இங்கொன்றுமாக கிடந்தது.
அதை பார்த்ததும் போலீசுக்கு சந்தேகம் வந்தது. எப்படி இந்த மூதாட்டி ரெயிலுக்குள் விழுந்தார். வீல்சேரில் தானாக வந்து விழுந்தாரா? அல்லது யாராவது தள்ளிக் கொண்டு வரும் போது தவறி விழுந்து விட்டாரா? என்று பல கோணங்களில் யோசித்தார்கள். ஆனால் பெற்ற மகனே தள்ளி கொன்று இருப்பார் என்று அவர்களால் நினைத்து பார்க்க கூட முடியவில்லை.
அடையாளம் காண்பதற்காக விசாரித்த போது அந்த மூதாட்டி திருவாலங்காடு ஒன்றியம், மணவூரை சேர்ந்த பத்மாவதி என்பது தெரிய வந்தது. போலீசார் அங்கு சென்று விசாரித்த போது கிடைத்த தகவல்களை கேட்டு போலீசாரே ஒரு கணம் ஆடிப்போனார்கள்.
மணவூர் அண்ணாநகரை சேர்ந்தவர் சேஷாத்திரி-பத்மாவதி தம்பதிகள். இவர்களுக்கு 3 மகன்கள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மனைவி, குழந்தைகளுடன் எல்லோரும் சந்தோசமாக வாழ்கிறார்கள். இளைய மகன் பார்த்தசாரதி (43) இவருக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். சேஷாத்திரி உயிருடன் இருந்தவரை திடகாத்திரமாக நடமாடிய பத்மாவதியை கொஞ்சம் கொஞ்சமாக முதுமை ஆட்கொண்டது. 72 வயதான பத்மாவதியால் நடமாட முடியவில்லை. வீட்டில் படுத்தபடுக்கையாகி விட்டார். மகன்களுக்கு தாயை பார்த்துக் கொள்வது யார் என்பதில் போட்டி எழுந்தது. என்னால் முடியாது என்று ஆளாளுக்கு கை கழுவி விட்டனர். கடைசியில் பார்த்தசாரதி தாயை பார்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவர் அந்த பொறுப்பை எடுத்துக் கொண்டாலும் வீட்டில் மனைவி, மாமியாரை பார்த்துக் கொள்வதற்கு முகம் சுளித்தார்.
என்னால் எல்லாம் உங்க அம்மாவை கவனித்துக் கொள்ள முடியாது என்று கணவரோடு சண்டை போட்டு விட்டு கோபத்தில் குழந்தைகளையும் அழைத்து சென்று விட்டார்.
கடந்த 3 மாதமாக தனி மரமாக தவித்த பார்த்தசாரதி, மனைவி பிரிந்து சென்ற சோகத்திலும் கட்டிலில் படுத்த படுக்கையாக கிடந்த தாயை சரியாக பராமரிக்க முடியாமலும் தவித்து வந்தார். இதனால் வாழ்க்கையே வெறுத்து போன பார்த்தசாரதி தனக்கு பாரமாக கருதிய தாயை கொன்று விட முடிவு செய்து உள்ளார்.
தனது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக நேற்று இரவு தாய் பத்மாவதியை வீல்சேரில் தூக்கி அமர்த்தி இருக்கிறார். வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் நம் பிள்ளை வெளியே சுற்றி விட்டு வரலாம் என்று அழைத்து செல்கிறானோ என்று மனதிற்குள் நினைத்த அந்த தாயின் மனம் சந்தோஷத்தில் திளைத்தது.
வீல்சேரை தள்ளியபடியே மணவூர் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் பார்த்தசாரதி சென்று கொண்டு இருந்தார். ரெயில் நிலையத்தில் மின் வெளிச்சங்களும் சுற்றிலும் கேட்ட வெளி உலக சத்தங்களும் பத்மாவதிக்கு உடலில் புதுதெம்பை கொடுத்தது. ஆனால் இன்னும் சில நிமிடங்களில் நாம் பெற்ற பிள்ளையே நம்மை கொல்லப் போகிறான் என்பது அந்த தாய்க்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
தூரத்தில் இருந்து பயங்கர ஒலி எழுப்பியபடி வேகமாக ஒரு ரெயில் வந்து கொண்டு இருந்தது. மகனின் கருணையால் பல மாதங்களுக்கு பிறகு ரெயிலை பார்க்கிறோம் என்று அந்த தாய் நிச்சயம் நினைத்து இருப்பார். ஆனால் மறுகணமே மின்னல்வேகத்தில் பார்த்தசாரதி வீல்சேருடன் தாயை ரெயில் முன்பு தள்ளிவிட்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் வீல்சேருடன் பத்மாவதியும் சின்னாபின்னமாக சிதைந்து போனார்.
சுமையாக இருந்த தாயை தூக்கி வீசி விட்டோம் என்ற நிம்மதியோடு பார்த்தசாரதி வீடு திரும்பினார். ஆனால் போலீசாரின் பார்வை பலகோணங்களில் இருக்கும் அல்லவா அப்படித்தான் அந்த ரெயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது வீல்சேரில் பெண் ஒருவரை தள்ளி கொண்டு வந்ததையும் ரெயிலில் தள்ளி விட்டதையும் பார்த்தனர்.
இதை அடிப்படையாக வைத்து பார்த்தசாரதியிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணையை தொடர்ந்தனர். அப்போதுதான் நடந்த சம்பவங்களை பார்த்தசாரதியும் விவரித்து இருக்கிறார்.
அடப்பாவி இப்படி ஒரு காரியத்தை எப்படிடா செய்தாய்? ஊரில் எத்தனையோ முதியோர் இல்லங்கள் இருக்கிறது? அங்கு கொண்டு விட்டு இருந்தால் கூட உனக்கு இப்படி கொலை பழி வந்து இருக்காதே? என்று போலீசாரும் பார்த்தசாரதியிடம் தெரிவித்து ஆதங்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பார்த்தசாரதி கொலை வழக்கில் ஜெயிலுக்கு அனுப்பப்படுகிறார்.