தமிழக செய்திகள்

12 ஆண்டு கால கோரிக்கைக்கு தீர்வு!- கொண்டனூர் தடுப்பணை தூர்வார கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ., நடவடிக்கை

விவசாயிகள் மட்டுமின்றி கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளுக்கும் நீர் ஆதாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், 24 வீரபாண்டி ஊராட்சியில் உள்ள ஆனைகட்டி – கொண்டனூர் கிராமத்தில் அமைந்துள்ள தடுப்பணையை தூர்வார வேண்டும் என்ற பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் 12 ஆண்டு கால கோரிக்கைக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது.

கொண்டனூர் கிராமத்தில் க.ச.எண் 723-ல் அமைந்துள்ள இந்த தடுப்பணை, 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு முக்கிய நீராதாரமாக இருந்து வருகிறது.

கடந்த 12 ஆண்டுகளாக முறையான பராமரிப்பு மற்றும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படாததால், தடுப்பணையில் அதிகளவில் வண்டல் மண் தேங்கி, நீர்த்தேக்க திறன் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் மழைநீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டதுடன், விவசாயம், கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளுக்கான நீர் தேவையும் பாதிக்கப்பட்டது.

விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து, தடுப்பணையை தூர்வாரி அதன் நீர்த்தேக்க திறனை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ., மேற்கொண்டுள்ளார்.

தடுப்பணை தூர்வாரப்படுவதன் மூலம் மழைக்காலங்களில் நீரை சேமித்து வைக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் விவசாயிகள் மட்டுமின்றி கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளுக்கும் நீர் ஆதாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

12 ஆண்டுகளாக நீடித்து வந்த கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதற்கு கொண்டனூர் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ.,வுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT