தமிழக செய்திகள்

‘களப் போராளிகளைவிட, ரீல்ஸ் போராளிகளைத்தான் இந்த சமூகம் அதிகம் கொண்டாடுகிறது’ - உதயநிதி ஸ்டாலின்!

என்றைக்கு நீட் வந்ததோ, அன்றிலிருந்து திமுக அதை எதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறது.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில், தோழர் நல்லகண்ணு அய்யாவின் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டுச் சிலையை திறந்துவைத்தார். ‘அம்மாச்சி கற்பனையின் முதல் ஆசிரியர்’ எனும் நூலையும் வெளியிட்டார்.

சிலை திறப்புக்கு பின் விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின்.,

“தோழர் நல்லகண்ணு அவர்களுக்குச் சிலை அமைத்திருப்பது மூலமாக, இந்தச் சமூகம் இன்றைக்கு உண்மையில் யாரையெல்லாம் கொண்டாட வேண்டும் என்பதனை இந்த நிகழ்ச்சியின் மூலமாக, இந்த அமைப்பினர் மிகத்தெளிவாகச் சொல்லியுள்ளார்கள்.

ரீல்ஸ் போராளிகள்

ஏனெனில், இன்றைக்கு மக்களுக்கான களப் போராளிகளைக் கொண்டாடுவதைவிட இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுக்கும் போராளிகளைத்தான் இந்தச் சமூதாயம் அதிகமாகக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறது.

“போராடினால் எதுவும் கிடைக்கும்” என்று உறுதியாக நம்பியவர், அய்யா நல்லகண்ணு அவர்கள். அதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம், சமீபத்தில் டெல்லியில் நடந்த நீட் விலக்குப் போராட்டம். டெல்லியில் நடந்த போராட்டத்தையொட்டி, இந்தியா முழுவதும் இளைஞர்கள் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ஆனால், நீட் எதிர்ப்புப் போராட்டம் என்பது, தமிழ்நாட்டுக்குப் புதிது கிடையாது. என்றைக்கு நீட் முதன்முதலாக வந்ததோ, அன்றிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் அதை எதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறது.

அய்யா நல்லகண்ணு அவர்கள் எந்த அளவுக்கு எளிமைக்குச் சொந்தக்காரரோ, அதே அளவுக்குப் போராட்டக் குணத்துக்கும் சொந்தக்காரர். அப்படிப்பட்ட அய்யா நல்லகண்ணு அவர்களின் சிலையைத் திறந்துவைப்பதை என்னுடைய வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன்.

ஓரணியில் களத்தில் நிற்கும்!

நான் இங்கு வந்ததும், குதிரை பேரம் குறித்துப் பலரும் பேசுவதாக கூறினார்கள். உண்மையாகவே குதிரை பேரம் எங்கு நடக்கிறது என்று, என்னைவிட உங்களுக்கு நன்றாகத் தெரியும். தோழர் வீரபாண்டியன் அவர்கள் இங்கு வந்தவுடன் என்னுடன் பேசிக்கொண்டு இருந்தார்.

தலைவர், உங்கள் தந்தையார் எப்படி இருக்கிறார் என்று கேட்டார். எப்போதும்போல அதே தோழமை உணர்வோடுதான் அவர் இங்கே அமர்ந்துள்ளார் என்று நம்புகிறேன். ஏனெனில், தமிழ் - தமிழர் - தமிழ்நாட்டு உரிமைக்கு எதிராக என்ன நடந்தாலும், திராவிட இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் என்றைக்கும் ஓரணியில் கைகோர்த்துக் களத்தில் நிற்கும்.” என தெரிவித்தார்.

இந்த விழாவில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் கலந்துகொண்டனர்.