தமிழக செய்திகள்

சமூக நீதி மாணவர் விடுதியில் முதல்வர் திடீர் விசிட்.. பல புகார்களை அடுக்கிய மாணவர்

விடுதி உணவுகள் மிகவும் தரமற்ற முறையில் உள்ளதாக குற்றம் சாட்டினார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா சமூக நீதி மாணவர் விடுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு ஆய்வு மேற்கொண்டபோது மாணவர்களில் ஒருவர், விடுதியில் நிலவும் குறைகள் குறித்து புகார் தெரிவித்தார்.

அப்போது அந்த மாணவர் கூறியதாவது:-

விடுதி உணவுகள் மிகவும் தரமற்ற முறையில் உள்ளது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தமிழ்நாடு அரசு பல வசதிகளுடன் விடுதி ஏற்பாடு செய்து கொடுத்தும், அதிகப்படியான குறைகள் தொடர்ந்து கொண்டுதான் வருகிறது.

இது சம்பந்தமாக கடந்த ஆண்டு அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் (AISF) சார்பாக, இங்கு உள்ள மாணவர்கள் எல்லோரும் முற்றுகை போராட்டம் நடத்தினோம்.

விடுதியில் புழுக்கள் உள்ள அசைவ உணவுகளை சமைப்பது தொடர்பாக புகார் கூறப்பட்டதையடுத்து, அப்போது ஐந்து நாட்கள் தரமான உணவுகள் வழங்கப்பட்டது.

ஆனால் அதையடுத்து மீண்டும் தரமற்ற நிலையிலேயே உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இங்கு வசிக்கும் மாணவர்கள் பகுதி நேர வேலை செய்துகொண்டும், டிஎன்பிஎஸ்சி போன்ற அரசாங்க உத்தியோகங்களுக்கு படித்து கொண்டும் இரவு நேரத்தில் 10 மணியளவில் விடுதிக்கு வருகின்றனர்.

அப்போது விடுதியின் கதவுகள் மூடப்படுகிறது, இதன் காரணமாக மாணவர்கள் வெளியில் படுத்து தூங்கும் அவலநிலை ஏற்படுகிறது.

அப்போது வெளியில் இருக்கும் மாணவர்களிடம் அங்கிருக்கும் ரவுடி கும்பல்களால் தொல்லை ஏற்படுகிறது.

விடுதியில் வாலிபால் மைதானம் தயார் செய்யப்பட்டு பல மாதங்களாக உள்ளது. ஆனால் மாணவர்கள் அதை பயன்படுத்த மறுக்கப்பட்டு வருகிறது.

விடுதி காப்பாளர்கள் மாணவர்களை இழிவாக பேசுகின்றனர். 64 கேமரா இருக்க வேண்டிய இடத்தில் மிகக்குறைவான அளவிலேயே கேமராக்கள் உள்ளது.

கழிப்பறை கட்டிடங்கள் உடைந்து போய், சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. மேலும் அடிக்கடி தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படுகிறது.

விடுதி சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால், கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது.

இவ்வாறு அந்த மாணவர் தமிழக முதல்வர் விஜய்யிடம் அடுக்கடுக்காக பல புகார்களை தெரிவித்தார்.

SCROLL FOR NEXT