சிறுமி கிடைக்கும் வரை பெற்றோர்களில் ஒருவனாக தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் தொடரும் என எழுதியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஆலம்பூண்டி ஊராட்சி நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் 7 வயது சிறுமி.
2-ம் வகுப்பு மாணவியான சிறுமி தனது பிறந்தநாளை கடந்த அக்டோபர் 11-ந் தேதி கொண்டாடினார். பின்னர் பெற்றோருடன் வீட்டில் தூங்கிய சிறுமி மறுநாள் அதிகாலை திடீரென மாயமானார். அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் களத்தி இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதுவரை இன்னும் துப்பு ஏதும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் பைக்கில் பேனர் கட்டி சிறுமியை கண்டுபிடிக்க உதவுமாறு சமூக ஆர்வலர் ஏழுமலை என்பவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவர் புதுச்சேரி கிராமப்பகுதிகளில் சிறுமி புகைப்படத்துடன் கூடிய பேனரை பைக்கில் வைத்து செல்கிறார். அவர் வைத்துள்ள பேனரில் காணாமல் போன 7 வயது சிறுமி விரைவில் கிடைக்க நாம் இறைவனை பிரார்த்தனை செய்வோம். சிறுமி கிடைக்கும் வரை பெற்றோர்களில் ஒருவனாக தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் தொடரும்" என எழுதியுள்ளார்.
மக்கள் கூடும் இடங்களில் பைக்கை நிறுத்தி அங்கிருப்போரிடம் சிறுமியை பார்த்தீர்களா என்று விசாரிக்கிறார். பார்த்தால் போலீசாரிடம் சொல்லுங்கள் என்கிறார்.
இதுதொடர்பாக அவரிடம் கேட்டதற்கு, மனித உணர்வு அடிப்படையில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பயணம் செய்கிறேன். போலீசாரும் சி.பி.சி.ஐ.டி. தரப்பிலும் தேடுகின்றனர். 25 நாட்களாகிவிட்டது. குழந்தை கிடைக்கவில்லை. இது யாருக்கோ நடந்தது என கடந்து செல்ல முடியவில்லை. மனசு கஷ்டமாக இருந்ததால் செய்கிறேன்.
பஸ் நிலையம், டீக்கடை, மாணவர், மாணவியிடம் விசாரிக்கிறேன். இதுவரை விழுப்புரம், மரக்காணம், கடலூர், வளவனூர் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்துள்ளேன். தீபாவளி வரவுள்ளது. குழந்தையின் மனநிலையை நினைத்து பார்க்கிறேன். அனைவரும் ஒன்று சேர்ந்து குழந்தையை கண்டறிவதில் உதவ வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு திரண்டது போல் மக்களும் இணைந்து குழந்தையை கண்டறிய உதவ வேண்டும். இதர மாநில முதலமைச்சர்களும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தவேண்டும் என்றார்.