குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம், நீடூரில் அமீனுல்லா (வயது 65) என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் மிகவும் பழமையான 6 ஆயிரத்து 676 அத்தியாயங்களை கொண்ட குர்-ஆன் ஒன்று உள்ளது.
சுமார் 19 பக்கத்தில் அரபி மொழியில் எழுதப்பட்ட மிகவும் சிறிய அளவிலான வரலாற்று சிறப்புமிக்க குர்-ஆன் ஒன்று 1.5 இன்ச் அகலம், 1.75 இன்ச் நீளம் உள்ள மெட்டல் பாக்ஸில் வைத்து 7 தலைமுறைகளாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த குர்-ஆன் 17-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என இந்திய தொல்லியல் துறை சான்று வழங்கி உள்ளது. இதனை மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் ராமலிங்கம் தலைமையில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, இயற்பியல் மற்றும் வேதியியல் துறை பேராசிரியர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மெட்டல் பாக்ஸில் உள்ள குர்-ஆனை, காரைக்குடி சிக்கிரி, பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சி, ஐ.ஐ.டி, என்.ஐ.டி., பி.எஸ்.ஜி காலேஜ் ஆப் சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி போன்ற ஆய்வகங்களுக்கு அனுப்பி ஆய்வு செய்தததில், நுண் பிணைப்பு எழுத்து வடிவில் இந்த குர்-ஆன் எழுதப்பட்டு உள்ளது.
இந்த குர்-ஆன் வைக்கப்பட்டுள்ள மெட்டல் பாக்ஸ் 2 ஆயிரத்து 600 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையை தாங்கக்கூடிய வகையில் 78 வகையான உலோகங்களால் உருவாக்கப்பட்டது கண்டறியப்பட்டு உள்ளது. விண்கலன் வளி மண்டலத்தை கடப்பதற்கு, அதன் மீது செராமிக் தொழில்நுட்பத்தில் முலாம்பூசி பயன்படுத்துகிறார்கள்.
செராமிக் அதிக எடை கொண்டதாக இருப்பதால் விண்கலனுக்கு அதிக எரிபொருள் தேவைப்படுகிறது. அதிக வெப்ப நிலையை தாங்கக்கூடிய இந்த உலோக பெட்டி உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்தினால் எடை குறைவான விண்கலத்தை தயார் செய்ய முடியும்.
78 வகையான உலோகங்களை எப்படி கலந்தார்கள்? என்ற தொழில்நுட்பத்தை ஆய்வு செய்ய வேண்டும். எதிர்காலத்தில் இதனை பற்றி பல மாணவர்கள் ஆராய்ச்சி மேற்கொள்ள இருப்பதால், அதை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.