தமிழக செய்திகள்

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து- பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

பல மணி நேரங்களுக்கு பின்பு உடல்கள் சிதறிய நிலையில் உடல் பாகங்கள் மீட்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் தனது இடத்தில் தகரசெட் அமைத்து சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரித்து வந்தார்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று அங்கு 5 தொழிலாளர்கள் பணியில் இருந்துள்ளனர்.

வெடி விபத்து

அப்போது திடீரென எதிர்பாராத விதமாக பலத்த சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறத் தொடங்கியது. இதில் அந்த பட்டாசு தயாரிக்க அமைக்கப்பட்டிருந்த தகர செட்டுகள் முழுவதும் வெடித்து சிதறி தரைமட்டமானது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உரிமையாளர் ராம் பிரகாஷ் (வயது 32), மீனம்பட்டியை சேர்ந்த இன்னாசி முத்து (42) ஆகியோர் உடல் கருகிய நிலையில் உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும், அங்கு பணிபுரிந்த மூன்று தொழிலாளர்களை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். இதில் ராமச் சந்திரன் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

5 பேர் பலி

மேலும் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த அய்யப்ப ராஜா (38), பாண்டித்துரை (35) ஆகிய இரண்டு பேரை

யும் தேடும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரங்களுக்கு பின்பு அவரது உடல்கள் சிதறிய நிலையில் உடல் பாகங்கள் மீட்கப்பட்டது. இதனால் 4 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமச்சந்திரன் என்பவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன் மூலம் பட்டாசு ஆலை விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.