தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, சிங்கம், புலி, கடமான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. மேலும் இருவாச்சிப்பறவை உள்ளிட்ட அபூர்வ வகை பறவை இனங்களும், மூலிகை செடிகளும், மரங்களும் உள்ளன.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் நுழைவதற்கும், கட்டுமான பணிகள் மேற்கொள்வதற்கும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
மாவட்டத்தில் தற்போது ஒருசில இடங்களில் சாரல் மழை பெய்து வந்த போதிலும் வறட்சியான சூழலே நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள விலங்குகள் குடிநீர் மற்றும் இரை தேடி இடம் பெயர்ந்து வருகின்றன. அந்த வகையில் மேகமலை அருவியில் அபூர்வ வகை சிங்கவால் குரங்குகள் தென்படுகின்றன.
இவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே வாழ்பவை. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் இவை மேகமலை அருவி பகுதியில் தண்ணீர் தேடி வந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதனை அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து புகைப்படமும் எடுத்து சென்றனர். வனத்துறையினர் விலங்குகளுக்கு எவ்வித தொந்தரவும் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர்.